காணமற்போன நிலையில் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியியைச் சேர்ந்த கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்ற குடும்ப பெண் பணத்துக்காக திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஐவரிடம் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லியடி முள்ளிப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் இப்பெண் சடலமாக மீட்கப்பட்டார். 20ஆம் திகதி முதல் இப்பெண் காணாமல் போயிருந்த நிலையில் 4 நாள்களில் பின் சடலம் மீட்கப்பட்டது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பீ.வீ.எஸ்.பூஜித ஜெயசுந்தர வழிகாட்டலில் காங்சேகசன்துறை பொலிஸ் பிராந்தியம் இரண்டுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையில் மூன்று பொலிஸ் குழுக்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பருத்தித்துறை பொலிஸ், நெல்லியடி பொலிஸ் பிரிவில் இருந்து இரண்டு பொலிஸ் விசேட குழுக்களும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையில் ஒரு பொலிஸ் குழுவும் உட்பட மூன்று விசேட பொலிஸ் குழக்கள் ஆரம்பகட்ட விசாரணையினை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சந்தேகத்தின்பேரில் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மூவரிடமும் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பெண் காணாமற்போக முன்னர் பருத்தித்துறை வங்கியில் இருந்து பணம் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் நகை ஒன்றையும் அவ்வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளார் என்பது பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணுக்கு நெருங்கிய நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பின் ஊடாக பருத்தித்துறை பகுதிக்கு அப்பெண் வரவழைக்கப்பட்டுள்ளார். பின்னர் பணம், நகை என்பன கொள்ளையிடப்பட்டு அப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
இக்கொலை மறைவான இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. பின்னர் முள்ளிப் பகுதியில் சடலம் வீசப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சடலத்தின் கழுத்து பகுதியில் பெரும் வெட்டுக் காயங்கள் காணப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் நீதிமன்றின் கட்டளையைப் பெற்ற பின் குறித்த பெண்ணின் கைதொலைபேசிக்கு சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் உள்வந்த, வெளிச்சென்ற அழைப்புக்களை ஆராய்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.