கரட்டுகளுடன் அவைக்கு வந்த எம்.பி

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர், இரண்டு கரட்டுகளுடன் நேற்று திங்கட்கிழமை அவைக்கு வருகைதந்திருந்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார ஜனமான என்பவரே இவ்வாறு அவைக்கு வருகைதந்திருந்தார்.

அவர், வரவு-செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு இரண்டு கரட்டுகளையும் காண்பித்து உரையாற்றினார்.

அவைக்குள் கரட் கொண்டுவந்தமை தொடர்பில் எம்.பி.யிடம் உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று அக்கிராசனத்தில் இருந்த ஜனக்க பண்டார எம்.பி, படைகல சேவிதர்களுக்கு பணித்தார்.

இடைமறித்த நலின் பண்டார, ‘நானோ இரண்டு கரட்டுகளைத்தான் அவைக்குள் கொண்டுவந்திருக்கின்றேன்’ ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவைக்கு வருகைதந்திருந்த ஜனாதிபதியோ ‘ஒரு மூடை கரட் கொண்டுவந்திருந்தார்’ என்று எடுத்தியம்பியதுடன் இந்த இரண்டு கரட்டுகளும் இந்த வரவு-செலவுத்திட்டத்தின் மூலமாகவே தனக்கு கிடைத்தது என்றார்.

இதன் போது குறுக்கிட்ட சுகாதார பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பி, அவைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே, சபைக்கு இந்தமாதிரி ஒவ்வொரு பொருட்களை கொண்டுவர முடியாது. உறுப்பினர் என்படி கரட் கொண்டுவந்தார். இப்படி போகுமாயின் குண்டுகள், துப்பாக்கிகளை கொண்டுவரமுடியும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தவில்லையா? உடனடியாக விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிநின்றார்.

மீண்டும் குறுக்கிட்ட, நலின் பண்டார ஜனமான எம்.பி., அப்படியானால் ஜனாதிபதி, வெள்ளிக்கிழமை ஒரு மூடை கரட் கொண்டுவந்திருந்தாரே என்று கூறியதுடன் நான், இரண்டு கரட்டுகளைதான் கொண்டுவந்தேன். நாளொன்றுக்கு இரண்டு கரட்டுகளை உண்ணுமாறு ஆயுர் வேத வைத்தியர் எனக்கு பரிந்துரைத்துள்ளார். அதனால் தான் நான் கொண்டுவந்தேன் அவைதான் இவை என்றார்.

குறுக்கிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் அப்படியால் நேற்று சாப்பிட்டீர்களா? ஆமாம் நேற்றும் சாப்பிட்டேன் எனக்கூறி கையிலிருந்த இரண்டு கரட்டுகளையும் மேசையில் வைத்தார்.

வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் கருத்துரைத்த அவைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் ஜனக்க பண்டார, சபைக்கென்று சில சட்டத்திட்டங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டியதுடன் சபையில் இருக்கின்ற கரட்டுகளை அகற்றுமாறு பணித்தார்.

இதனைத்து அங்கு வந்த் படைகல சேவிதர்கள் எம்.பியின் மேசையில் இருந்த அவ்விரண்டு கரட்டுகளையும் எடுத்துசென்றனர்.

Related Posts