35 விடயங்களை த.தே.கூ. அமுல்படுத்தியிருக்கலாம் – தவராசா

வடமாகாணசபையின் முதலாவது கூட்டம் நடைபெற்று, இம்மாதம் 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்தது. வடமாகாண சபை தேர்தலின் போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் இந்த ஒருவருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈ.பி.டி.பி உறுப்பினருமான எஸ். தவராசா தெரிவித்தார்.

thavarasa

வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வட மாகாண சபை தேர்தலின் போது மூன்றிலிரண்டு வாக்குகளை எமக்களித்தால், நாம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவோம்.

எனவே, எங்களுக்கு வாக்களியுங்கள். இது கொலைகார அரசாங்கம். நாம் 3ஆம் காட்ட போரை ஆரம்பிப்போம் என்று பிரசாரம் செய்தே வாக்குகளை பெற்றுக்கொண்டனர்.

இவற்றை நம்பியே வடக்கு மக்கள் வடமாகாண சபை தேர்தலின் போது, வாக்களித்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகவே மக்கள் வாக்களித்தார்கள்.

ஆனால், ஒரு வருடகாலமாகியும் வடமாகாண சபை சாதித்தது என்ன? வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?.

13ஆம் திருத்தச்சட்டத்தின் படி, வடமாகாண சபைக்கான அதிகாரங்களாக 37 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 13ஆம் திருத்தச்சட்டம் அணிலுக்கு வந்த பின்னர் அரசாங்கத்தினுடைய சில அரச விடயங்கள் மாகாணசபைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பாக நாட்டில் ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன.

பொலிஸ், காணி விடயங்களை கவனத்தில் கொள்ளாது மிகுதியாக இருக்கின்ற 35 விடயங்களை பார்த்தோமேயானால், அவை முழுமையடைய வேண்டுமேயானால், அவற்றுக்கான சட்டவாக்கங்கள் ஆக்கப்படவேண்டியது முக்கியமாகும்.

ஆனால், ஓகஸ்ட் மாதம் விற்பனை மற்றும் காணி வரி உள்ளடக்கிய சட்டவாக்கத்தை மாத்திரம் சமர்ப்பித்திருந்தார்கள். வியாபார ஸ்தாபனங்களுக்கு, வரியினுடைய எல்லைகளை நிர்ணயிப்பது நாடாளுமன்றம்தான். வடமாகாண சபையினால், அதனை நிர்ணயிக்க முடியாது. வடமாகாண சபையினருக்கு எல்லையில் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேறு எந்தவொரு சட்டவாக்கமும் சமர்ப்பிக்கப்படவில்லை. வடமாகாண சபை அரசாங்கத்தில் தங்கியுள்ளது.

அரசாங்கதினால் ஒதுக்கப்படும் நிதியினை கொண்டு, வடமாகாணத்தில் பல கட்டடங்களை திறந்து வைத்து, புகைப்படமெடுத்து ஊடகங்களில் வெளியிட்டு தங்களை தாங்களே பிரபல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஒரு வருடகாலமாக வடமாகாணசபை காலத்தை வீணடித்துள்ளது. வடமாகாண சபை இயங்க வேண்டுமாயின் அரசாங்கம் நிதி கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் தென் ஆபிரிக்க துணை ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போது, வடமாகாண முதலமைச்சர் திருகோணமலையில் உள்ள ஹோட்டலொன்றில் அவரை சந்தித்தார்.

இதன்போது, நான் ஹோட்டலில் உங்களை சந்திப்பதற்கான காரணம், எனக்கு சரியான அலுவலகமொன்று இல்லை என்று தென் ஆபிரிக்க துணை ஜனாதிபதியிடம் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

நான் இப்போது வடமாகாணம் அல்லது அங்குள்ள அமைச்சர்கள் யாரையேனும் விவாதத்துக்கு அழைக்கின்றேன். முடிந்தால் அரசாங்கம் ஒன்றையும் வடமாகாணத்துக்கு செய்து கொடுக்கவில்லை என்று என்னுடன் நேருக்கு நேராக விவாதிக்க சொல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts