காக்கைதீவு, கல்லுண்டாய் வெளியில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை சூழ பாதுகாப்பு வேலி அமைக்கப்படவுள்ளது. அத்துடன் ஒழுங்கு முறைப்படி கழிவுகளை கொட்டுவதை மேற்பார்வை செய்வதற்கு உத்தியோகத்தர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என யாழ்.மாநகர ஆணையாளர் என்.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
வேலி அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்திடமிருந்து நிதி இன்னமும் கிடைக்கவில்லை. இதனாலேயே திட்டத்தை நடைமுறைப்படுத்த காலதாமதம் ஏற்படுகின்றது. குறித்த பகுதியில் இதுவரை காலமும் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு வந்தன.
கழிவுகளைப் பரவி அதை பாதையாக மாற்றி அதன் மேலால் வாகனங்கள் உட்சென்றே கழிவுகளை அங்கு கொட்டப்பட்டன. குறிப்பாக கழிவுகளை கொட்டுவதற்கு உட்செல்லும் வாகனங்கள் இடைநடுவில் புதையுண்டும் போய்யிருந்தன. இதன் காரணமாகவும் தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள காரணத்தினால் வாகனங்கள் உட்சென்று கழிவுகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வீதியோராமான கழிவுகளை கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வீதியோரமாக கழிவுகள் கொட்டப்படுவது எதிர்வரும் புதன்கிழமைக்கு இடையில் சரி செய்யப்பட்டு மீண்டும் உரிய இடங்களில் கழிவுகள் கொட்டப்படும். மேலும் அங்கு கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்கு செல்லும் கால்நடைகள் உயிரிழப்பதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு இவ்விடத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் கொட்டப்படும் கழிவுகள் உரிய முறையில் கொட்டப்படுவதை கண்காணிக்க பணியாளர்களும் நியமிக்ககப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.