விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்ற அதேவேளை, தற்போதைய அரசும் இனிவரும் நாள்களில் கவிழ்ந்துவிடும் என்று சோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு ‘மவ்பிம’ சிங்களப் பத்திரிகை சோதிடர்களின் கருத்துக்களை உள்ளடக்கி பத்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்த பத்தியிலேயே இவ்வாறு ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்டு இவர்களது கணிப்புகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் பிரபல சோதிடர்களான சுமணசிறி பண்டார, எஸ்.ஜே. சமரக்கோன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி நிச்சயம் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக இப்போதுள்ள அரசாங்கம் கவிழும் நிலைமை ஏற்படும் என்றும் சூசகமான முறையில் அந்த சோதிடர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான சனிப்பெயர்ச்சியின்போது சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன என்றும் சுமணசிறி பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். சோதிடர் போத்தலகே, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்றும், அதற்குப் பதிலாக இலங்கை மீது சர்வதேச நெருக்கடிக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சோதிடர் எஸ்.ஜே. சமரக்கோன் அரசாங்கம் பதவியிழப்புக்கு மேலதிகமாக நீதித்துறை தீர்ப்புகள் ஊடாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். 2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த வெற்றிபெற மாட்டார் என்று 50 சோதிடர்கள் தெரிவித்திருந்தனர்.
மஹிந்தவுக்கு ஆதரவாக எட்டுப் பேர் மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தனர். அவர்களில் எஸ்.ஜே. சமரக்கோன் முக்கியமானவர். 2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவே ஜனாதிபதியாவார் என்றும், இரண்டு தடவைகள் அவர் பதவி வகிப்பார் என்றும் கணித்துக் கூறியிருந்தார்.
அதேகாலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முடிவு குறித்தும் எஸ்.ஜே. சமரக்கோன் தெளிவான எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தார். அது மட்டுமன்றி அவரது எதிர்வு கூறலுக்கேற்ப சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், மங்கள-ஸ்ரீபதி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சம்பவம் போன்ற நிகழ்வுகளும் அச்சொட்டாக நடந்து முடிந்திருந்தன என்றும் நம்பிக்கை வெளியிடப்படுகிறது.- என்று அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.