நம்பிக்கையோடு இருங்கள். நான் அழிவைநோக்கி யாரையும் அழைக்கவில்லை. சுபீட்சமான வாழ்வு நோக்கியும் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவுமே உங்களை அழைக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு கோரி, அமைச்சரின் யாழ்.செயலகத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (26) சென்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் மத்தியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டு பணிபுரியச் செல்லும் அலுவலகங்களில் கண்ணியமாகவும் அக்கறையோடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றவர்களாகவும் செயற்பட வேண்டும்.
வேலைவாய்ப்பை உங்களுக்கு பெற்றுத்தருவதற்கு நானும் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி முயற்சிகளை எடுத்து வருகின்றேன். தொடர்ந்தும் எம்மோடு இணைந்து செயற்படுகின்ற போதுதான் நானும் உற்சாகத்தோடு முயற்சி செய்து வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தரமுடியும்.
இதேவேளை, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக எவருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். அவ்வாறான நடவடிக்கைகளுக்கு நான் ஒருபோதும் அனுமதியளித்ததில்லை. அது எமது கட்சியின் கொள்கையுமல்ல. நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கான வேலைவாய்ப்புகள் விரைவில் பெற்றுத்தரப்படும்.
அத்துடன், நீங்கள் வெளிப்படையாகவும் நம்பிக்கையுடனும் எமது மக்களுக்கு பணியாற்றுவதையே நான் விரும்புகின்றேன் என்றும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.