இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இந்திய- இலங்கை உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று நம்புவதாக தபால் முத்திரையை வெளியிட்டுவைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவியவர்களில் ஒருவரான அனகாரிக தர்மபால, இந்தியாவிலும் பௌத்த மதத்தை மீள உருவாக்க பங்காற்றியதாகவும் தபால் முத்திரையை வெளியிட்ட குடியரசுத் தலைவர் கூறினார்.
பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திரப் போராட்டத்தில் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றியதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பின்னர் இடதுசாரிகள் சேர்ந்து அமைத்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் காலத்திலேயே அனகாரிக தர்மபாலவின் கருத்துக்களுக்கு கூடுதல் கௌரவம் அளிக்கப்பட்டதாக இலங்கையின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் சிவசுப்ரமணியம் பத்மநாதன் கூறினார்.
‘இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற இந்த தீவிரமான தேசியவாதத்துக்கு அடியிட்டவர்களில், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உள்ளவர்களில், இவரும் ஒருவராவார்’ என்றும் கூறினார் பேராசிரியர் பத்மநாதன்.