“தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். தமிழர் விடுதலைக் கூட்டணியும் பலவீனமடைந்து விட்டது. எனவே தமிழர்களுக்குப் புதியதோர் அரசியல் தலைமைத்துவம் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறார் கே.ரி.இராஜசிங்கம்.
பழந்தலைமைகள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். கல்வி கற்ற இளந்தலைமுறையினர் அரசியல் தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டுமென்பது ராஜசிங்கத்தின் வலியுறுத்தல்.
கே.ரி.இராஜசிங்கம்!
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். 1968இல் பத்திரிகையாளராகப் பணியாற்றியபோது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அறிமுகம் கிடைத்ததால் கட்சியில் இணைந்தவர். ஏஷியன் ரிபியூன் இணையத்தளத்தின் ஆசிரியர்
அவர் அண்மையில், காணாமற்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக நீண்டவொரு சாட்சியத்தை வழங்கியிருக்கிறார்.
“காணாமற் போனோர் விடயம் இரண்டு கோணங்களைக் கொண்டது. அநேகமானோர் ஒரு பக்கத்தை மட்டுமே சொல்கிறார்கள். புலிகள் இயக்கத்தினரால் கடத்தியும் படுகொலை செய்தும் காணாமற் செய்யப்பட்ட பல உறவுகளைப் பற்றி எவரும் வாய் திறக்கிறார்கள் இல்லை. ஆகவே, அந்த வெளிவராத உண்மைகளைப் பற்றியே ஆணைக்குழு முன்னிலையில் நான் சாட்சியமளித்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தவறான தகவல்களைக் கூறி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். அந்தக் கட்சியை உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தடை செய்ய வேண்டும். பல்வேறு கொலைகளைப் புரிந்துவிட்டுத் தற்போது அந்தக் கட்சியிலிருக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்திற்குச் சார்பாக செயற்படுகின்றவர்கள் நாட்டுக்குள் காலடி எடுத்து வைத்தால், அவர்களைக் கைது செய்ய வேண்டும். புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றி விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“இந்த ஆணைக்குழு மீது நம்பிக்கை இல்லை என்றும் இன்னும் பற்பல கதைகளைக் கூறிக்கொண்டும் சிலர் அதனைப் புறக்கணிப்பதாகக் கூறுகிறார்களே! ஆணைக்குழு தொடர்பில் உங்கள் அபிப்பிராயம்?”
ஆரம்பத்தில் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் அப்படித்தான் சொன்னார்கள். அது ஒரு கண்துடைப்பு என்றார்கள். பின்னர், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறார்கள். ஆகவே முதலில் நம்பிக்கை கொள்ளுங்கள். எதனையும் அவநம்பிக்கையுடன் நோக்காதீர்கள் என்றுதான் நான் கேட்கின்றேன்”
“கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள். கூட்டணியாலும் பயன் இல்லை என்கிறீர்கள், அப்படியானால், தமிழ் மக்கள் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”
“அவர்கள் மாற வேண்டும். சிந்தனையில் தெளிவு வேண்டும். இப்போது பாருங்கள் வட மாகாண சபையில் என்ன செய்கிறார்கள்! அபிவிருத்தியைச் செய்யாமல் அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முதலமைச்சர் ஒரு நீதியரசாக இருந்தவர் ஒன்றும் செய்கிறார் இல்லை. அவர்களை விடவும் நான் மக்களுக்குச் சேவை செய்கிறேன். எனது சொந்தப் பணத்தில் எத்தனையோ பள்ளிக்கூடங்களுக்கு உதவி செய்து வருகிறேன். மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான பொறிமுறை. அங்கு அரசியல் பேசிக்கொண்டு காலத்தை வீணடிக்கக்கூடாது. செய்ய முடியாவிட்டால் விலகிக் கொண்டு இளையவர்களுக்கு வழிவிட வேண்டும்”
“முதலமைச்சர் தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூட்டமைப்பினர் தம்மைச் செயற்பட விடுகிறார்களில்லை என்றும் கூறுகிறாரே!?”
“மாகாண சபைக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதானே தேர்தலில் போட்டியிட்டிருப்பார். அவர் ஒரு நீதியரசர் அல்லவா! இப்போது அதிகாரம் இல்லையென்று கூறலாமா? கூட்டமைப்பினர் செய்ய விடுகிறார்கள் இல்லை என்று சொன்னால், இவர் ஓர் முதலமைச்சரா? பதவியைப் பயன்படுத்திச் செயலாற்றும் திறன் இல்லாவிட்டால் அந்தப் பதவியில் இருந்து என்ன பயன். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்று சொல்வதைப் போல அவர் கூட்டமைப்பினர் மீது பழிபோடுவதை விடுத்து தமது இயலாமையைக் கூறி பதவி விலகிவிட வேண்டும்”
“புலம்பெயர்ந்து வாழும் உங்களைப் போன்றவர்கள் மக்கள் பணியாற்ற முன்வரலாமே!?”
“நான் தொண்டாற்றிக்கொண்டுதான் இருக்கின்றேன். புலம்பெயர்ந்து இருப்பவர்கள் வெளிப்படையாக வந்து செயற்பட மாட்டார்கள். இங்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றிவிட்டு அல்லது அரசாங்கத்தைப் பாராட்டிப் பேசிவிட்டு மீண்டும் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது. அங்குத் தமது அகதி அந்தஸ்தையும் இருப்பையும் தக்க வைத்துக்கொள்வதற்காகத் தமக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுப்பதையே அல்லது தோன்றுவதையே அவர்கள் விரும்புவார்கள். ஆகவே தலைமைத்துவத்தைக் கொடுத்துச் செயற்படுத்தும் ஆற்றல் அவர்களிடம் இல்லை.”
“கல்வி கற்ற இளையவர்கள் மத்தியில் அரசியல் விழிப்பை ஏற்படுத்துவதற்கான பொறிமுறை உங்களிடம் இருக்கிறதா?”
“நிச்சயமாக. தற்போது பாடசாலையில் கல்வி கற்று வருகின்ற மாணவர்கள் கூட்டமைப்பினதோ கூட்டணியினதோ அரசியலுக்குள் வீழ்ந்திடாதிருப்பதற்கான விழிப்பினை நாம் ஏற்படுத்தி வருகின்றோம். புதிய சிந்தனையைத் தோற்றுவித்து வருகின்றோம். மூன்று மொழிகளையும் கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வலைக்குள் சிக்காதிருப்பதற்குத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். அதற்கு அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புச் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். பலருக்கு வீடு வாசல் இல்லை. அதனை நிவர்த்திக்க வேண்டும். அவசியமில்லாத காணிகளை மீளக் கையளிக்க வேண்டும்.”
என்று சில யோசனைகளையும் முன்வைக்கின்றார் ராஜசிங்கம் !
அவர் அளித்த சாட்சியத்தை ‘உண்மை வெளிவந்தது’ என்ற தலைப்பில் மும்மொழிகளில் நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.
நன்றி தினகரனுக்காக விசு கருணாநிதி