சமுர்த்தி திட்டத்தினை வடக்கிற்கு அமுல்ப்படுத்தியது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினாலேயே வாழ்வின் எழுச்சித்திட்டத்தையும் சமுர்த்தி கொடுப்பனவு திட்டத்தையும் வடக்கிற்கு நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு எத்தனித்தவர்கள் கூட்டமைப்பினர் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
பண்டத்தரிப்பு இந்துக்கல்லுரியில் வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் 6ம் கட்டத்தினை யாழ்.மாவட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு சமுர்த்தி திட்டம் அமுலாக்கப்பட்டு இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவே வடக்கிற்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டு இன்று ஏறத்தாழ 101,000 குடும்பங்கள் சமுர்த்தியால் வடமாகாணத்தில் பயன்பெறுகின்றனர். இப்பயனாளிகளின் தொகையை 125,000 ஆக அதிகரிக்கும்படி அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி அவர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இச்சமுர்த்தித் திட்டத்தை மேலும் விரிவாக்கும் நோக்கத்துடன் வாழ்வின் எழுச்சித்திட்டமாக மாற்றுவதற்குரிய ‘வாழ்வின் எழுச்சி’ சட்டமூலத்தை அரசு பாராளுமன்றத்தில் 2012 ம் ஆண்டு கொண்டு வந்தபோது அச்சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடியவர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். அவரின் சட்டவிவாதத்தின் விளைவு உச்ச நீதிமன்றத்தினால் எந்தெந்த மாகாணசபைகள் அச்சட்டமூலத்தை ஏற்கின்றனவோ அந்த மாகாணங்களில் மட்டுமே வாழ்வின் எழுச்சித்திட்டத்தை அமுல்ப்படுத்தலாம் என்ற தீர்ப்பை வழங்கியிருந்தனர்.
அத்தீர்ப்பு வழங்கப்பட்ட காலத்தில் வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இல்லாது இருந்ததினால் அச்சட்டமூலத்தை உச்ச நீதிமன்றத்தின் அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்கம் அமுல்படுத்தியிருக்குமேயானால் இன்று வடக்கில் வாழ்வின் எழுச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கமாட்டாது அத்துடன் சமுர்த்தித்திட்டமும் அமுல்படுத்தப்பட்டிராது.
ஆனால் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதனாலேயே இன்று வடக்கில் வாழ்வின் எழுச்சித்திட்டமும், சமுர்த்தித்திட்டமும் அமுலில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன், வாழ்வின் எழுச்சி திணைக்கள உதவி ஆணையாளர் மகேஸ்வரன், யாழ்.மாவட்ட வாழ்வின் எழுச்சி திட்ட இணைப்பாளர் ரகுநாதன், அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால, அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், ஈ.பி.டி.பியின் மானிப்பாய் பிரதேச இணைப்பாளர் அன்ரன்ஜோன்சன் (ஜீவா) விவசாயத் திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் சிறிபாலசுந்தரம் உள்ளிட்ட திணைக்களங்களில் அதிகாரிகள் எனப் பல்துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.