கடைசிநேர இழுபறியில் கத்தி… திட்டமிட்ட படி படம் வெளிவருமா…?!

கத்தி படத்தில், லைகா படத்தின் பேனரை அகற்ற தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதால் கத்தி படம் திட்டமிட்டபடி வெளிவருமா…? என்பது சந்தேகமாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்த நடிப்பில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

kaththy

லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்ஷேயின் நெருங்கி உறவினர் என்றும், அவருடைய பினாமி என்றும் கூறி இப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆனால், இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி கத்தி படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகிவிட்டது. இதனிடையே நேற்று வெளியான கத்தி படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், ”கத்தி” படத்தில் நடித்து இருக்கும் விஜய்யையோ அல்லது இயக்குநர் முருகதாஸையோ நாங்கள் எதிர்க்கவில்லை, லைகா என்ற பேனரை மட்டும் அகற்றுமாறு தமிழகத்தில் உள்ள தமிழ் ஆதரவு கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் கத்தி திரையிடப்படும் தியேட்டர்களில் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம், படத்தை திரையிட விட மாட்டோம் என்று தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடைய ஐயங்கரன் கருணாமூர்த்தி, சென்னை கமிஷனரை சந்தித்து, ”கத்தி” திரையிடப்படும் தியேட்டர்களில் பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

இப்படியாக தமிழ் அமைப்புகள் எதிர்த்து வருவது, தியேட்டர்களில் பாதுகாப்பு கேட்டு தயாரிப்பு நிறுவனம் முறையிட்டு இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் இன்னும் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கவில்லை. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தியேட்டர்கள் புக்காயுள்ளன.

சென்னையில் பெரும்வாரியான தியேட்டர்களில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள தியேட்டர்களில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தி படத்திற்கான புக்கிங் இன்னும் ஆரம்பமாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் கத்தி படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் அனைத்து பிரச்னைகளும் இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்து இருக்கிறது.

Related Posts