ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

anantha-sankaree

எமக்கு வேண்டியது சமாதானம், ஒற்றுமையுடன் கூடிய இணக்கப்பாடு என்ற தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம், பெயர்ந்த மக்களும் பிரிவினை கோருவதையும், தமிழீழம் அமைப்பதையும் கைவிடுவார்களேயானால் தாங்களும் நிறைவேற்று அதிகார முறைமையை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்தமையானது நாட்டிலுள்ள பல்லின மக்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆனால் ஆதிக்கம் செலுத்துகின்ற புலம்பெயர்ந்தவர்களும் அவர்களில் தங்கியிருந்து செயற்படுகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் இதற்கு சம்மதிக்கத் தயங்குவார்கள். எது எப்பிடியிருப்பினும் தங்களின் கூற்று உறுதியாக இருக்குமானால் இந் நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சாதகமானதொரு நிலைமையை உருவாக்க பலர் தயாராகவே உள்ளனர்.

1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களை நினைவூட்ட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ புலம் பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினருக்கோ இப்பிரச்சினையில் தலையிடுவதற்கு அருகதையுண்டா இல்லையா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.

எவரும் தமது சொந்த தேவைக்காக நாட்டின் சரித்திரத்தை மாற்றியமைக்க கூடாது. எல்லாப் பிரச்சினைகளிலும் பார்க்க நாட்டின் முக்கிய பிரச்சினை முதலிடம் வகிக்கட்டும். 1970ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரை பிரதமராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மூன்றும் இணைந்து ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தன. தாங்கள் பெலியத்த தொகுதியிலிருந்தும் நான் கிளிநொச்சியிலிருந்தும் தெரிவானோம். அப்போது ஆகக்குறைந்த 24 வயதுடைய இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தீர்கள் என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

அப்போது உருவாக்கப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்தை அமுல்படுத்துவதில் அன்றைய அரசு அவசரம் காட்டிவிட்டது என்பதே எனது கருத்தாகும். முறையாக சிந்திக்காமையினால் பழைய சோல்பரி அரசியல் சாசனத்தில் இடம்பெற்றிருந்த 29ஆவது பிரிவில் அடங்கியிருந்த அம்சங்கள் புதிய சாசனத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு சேர்க்கப்பட்டிருந்தால் நாடு எதிர்நோக்கிய மகிழச்சி தராத நிலைமை உருவாகியிருக்காது.

அதன் விளைவு தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.ஜி..பொன்னம்பலம்பலம் அவர்களுடைய கட்சியும் ஏறத்தாழ இணைந்துக்கொண்டன. 1977ஆம் ஆண்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே காலமானார். தமிழரசு கட்சியை மீள புதுப்பிக்கும் எண்ணம் அவருக்கு கடுகளவும் இருக்கவில்லை. அதற்கு ஆதாரமாக ஜி.ஜி. பொன்னம்பலம், திருவாளர். எஸ். தொண்டமான் ஆகிய இருவரையும் இணைத்தலைவராக தனது தலைவர் பதவியோடு இணைத்துக் கொண்டார்.

இன்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரென பெரிதாக பாராட்டைப்பெறுகின்ற மாவை சோனதிராசா, 30 ஆண்டுகளாக இயங்காத நிலையில் இருந்த தமிழரசு கட்சியை அக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், 1977ஆம் ஆண்டு, மறைந்த 26 ஆண்டுகளுக்குப் பின்னர் எவருடைய அனுமதியும் இன்றி புதுப்பித்துள்ளார். அப் புனரமைப்பை சோனதிராசா 2003ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உப தலைவர் தங்கனை சந்தித்து பேசினார். மிகவும் மனவேதனை தரும் விடயம் என்னவென்றால் இப்புனரமைப்பு பணி தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பேராசிரியர் ஒருவர், த.வி.கூ யின் வரலாறு தெரியாத சில ஊடகவியலாளர்களும் சேர்ந்தே இந்த புனரமைப்புப் பணியை மேற்கொண்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அதே கதி இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஏற்பட கூடாதென்பதற்காக த.வி.கூ செயலாளர் நாயகமும் அன்றைய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான அமரர். அ.அமிர்தலிங்கம் கட்சியின் பதிவை பாதுகாத்தே வந்தார். அவ்வாறு பாதுகாத்தமையானது அக்கட்சியின் பெயரை எவரும் துஷ்பிரயோகம் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே.

அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அமரர் தங்கத்துரை, அதே நோக்கத்துக்காகவே அப்பதவியை பாதுகாத்து வந்தார். தங்கத்துரை அவர்களின் படுகொலைக்குப் பின்னர் மாவைசேனாதிராசா அப்பதவியை தனதாக்கிக் கொள்ளும் முன் இரு தடவைகள் த.வி.கூ சார்பில் தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

2000ஆம் ஆண்டும் 2002ஆம் ஆண்டும் த.வி.கூ இன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 2002ஆம் ஆண்டு த.வி.கூ கட்சியின் ஜனநாயக கோட்பாடுகளை மீறி தனக்கு முதலாவதாகவும் ஏனைய இருவருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு வாக்குவேட்டையில் ஈடுபட்டார். தூரதிஷ்டவசமாக எனக்கு 36,000 வாக்குகளும் அவருக்கு 32,000 வாக்குகளும, கிடைத்தன. யாழ் தேர்தல் மாவட்டத்தில் வெற்றிப்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 09 பேரில் நான் அதிகூடிய வாக்குகளால் முதலாவதாக தெரிவானேன். இதன் தாக்கமே மாவைசேனாதிராசா தவறான வழிகளை கையாள்வதற்கு வழிவகுத்திருக்க வேண்டும்.

மாவைசேனாதிராசா விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தங்கனை 14-10-2003 இல் கிளிநொச்சியில் சந்தித்தார். அவரது பணிப்பின் பேரில் என் மீது நம்பிக்கையில்லாத பிரேரணை கொண்டு வருவதில் ஈடுபட்டிருந்தார்.

தங்கனை சந்தித்து ஐந்து நாட்களின் பின்னர் 19-10-2003 இல் ஞாயிறு ‘சண்டே டைம்ஸ்’ ஆங்கில பத்திரிகைக்கு அவர் அளித்திருந்த பேட்டியில் 75 வீதத்திற்கு மேற்பட்ட விடயங்கள் உண்மைக்கு புறம்பானதாக காணப்பட்டன. அப்பேட்டியை நான் விரைவில் வெளியிட உள்ளேன்.

தமிழரசு கட்சியை மக்களே புதுப்பிக்கும்படி கோரினார்கள் என்று அவர் கூறுவதில் எவ்வித உண்மையும் இல்லை. ஏனெனில் ஒரு சிறு தொகையினர் மட்டும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குமார் பொன்னம்பலத்துடன் சென்றனர். எஞ்சிய சகல காங்கிரஸ்காரர்களும் தமிழரசு கட்சியினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் வலுவாக இணைந்து கொண்டனர். அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் திருமதி மங்கையற்கரசி இந்த விடயம் சம்பந்தமாக விடுத்த அறிக்கையில் பின்வருமாறு கூறுகிறார்.

எனது கணவர் தமிழரசு கட்சயின் பதிவை பாதுகாத்து வந்தமைக்கான ஒரே காரணம் அக்கட்சியின் பெயரும் சின்னமும் தகுதியற்றவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே. என் கணவர் ஒருபோதும் தமிழரசு கட்சியை புனரமைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருக்கவில்லை. அவரால் ஆதரவளிக்கப்பட்டு வந்த ஒரு சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும். இச்செயலானது மறைந்த அன்னார் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதாகவே உள்ளது.

ஆகவே நான் திட்டவட்டமாக தெளிவாக எல்லோருகக்கும் கூறுவது என்னவென்றால் இச் செயலுக்கு என்னுடைய அனுசரணையோ ஆசீர்வாதமோ இருக்கவில்லை. அதற்குப்பதிலாக இச் செயலை வன்மையாக கண்டித்து எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிக்கும் செயலாகவே உள்ளதென தெரிவிக்க விரும்புகிறேன்.

திருமதி.அ.அமிர்தலிங்கம் அவர்களின் கூற்றை நான் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கிறேன். பெரும் தலைவராகிய தந்தை செல்வா அகிம்சைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர். அவர் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியை அழிப்பதற்கு விடுதலைப் புலிகளின் உதவியை நாடியது பெருந்தலைவருக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

இன்னொரு முக்கியமான விடயம் பலரால் மறைக்கப்பட்டிருந்தாலும் நான் தமிழ் மக்களுக்கு அடிக்கடி கூறிவந்த விடயமாகும். தமிழர் விடுதலைக் கூட்டணியால் 1994ஆம் ஆண்டு தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயமுமாகும்.

த.வி.கூ செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவருமாக செயற்பட்ட அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் கூற்று :- ‘தமிழ் மக்கள் தமிழீழம் அமைப்பதற்கு எமக்கு ஆணை தந்துள்ளனர். ஆனால் அரசு ஒரு மாற்றுத் தீர்வை முன்வைக்குமாக இருந்தால் அது எமது தலைவர்களுக்கு திருப்தியளிக்கும் பட்சத்தில் நாம் அதை எமது மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் அனுமதியை பெறுவோம்’. எமது தீர்மானம் மிகத் தெளிவாக எதை காட்டுகிறதென்றால் அரசு இனப்பிரச்சினை சம்பந்தமாக தமது நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காகவே அன்றி நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றிருக்கவில்லை.

ஜனாதிபதி அவர்களே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சரித்திரம் மிக நீளமானது. ஆனால் அவற்றை மிகவும் சுருக்கமாக முடிந்தளவு பல விடயங்களை தங்கள் முன் வைக்கிறேன். தமிழரசு கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய இரு அமைப்புக்களும் நேர்மையான முறையில் புனரமைப்பு செய்யப்படவில்லை. நான் இந்நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவனாக இருக்கிறேன். எமது மக்கள் எதுவித இன வேறுபாடின்றி சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும் என்பதே எனது அவா.

முதல் முதல் த.தே.கூட்டமைப்பாக அமைக்கப்பட்ட கட்சிகள் த.வி.கூ, அ.இ.த.கா, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவையே அன்றி தமிழரசு கட்சியல்ல. த.தே.கூட்டமைப்பிலிருந்து த.வி.கூ யை நீக்கிவிட்டு 26 ஆண்டுகளாக இயங்காமலிருந்த தமிழரசு கட்சியை சேர்த்துக் கொண்டார்கள்.

2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாகவும், தமிழ் தேசிய தலைமையாகவும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வதாக பிரகடனப்படுத்தியிருந்தார்கள்.

ஓன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சனை சம்பந்தமாக பேசி ஓர் உடன்பாட்டுக்கு வருவது சம்பந்தமாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை கூட்டி ஒன்றுகூடல் வைப்பதற்கு ஆரம்ப நடவடிக்கையாக சில தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளேன்.

பெரிய கட்சிகளுடன் இணைந்து செயற்படும் சிறு கட்சிகள் இப்பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமென எதிர்பார்க்கின்றோம். நாம் ஒற்றுமையாக ஏகோபித்த முடிவெடுத்தப் பின் நேரில் சென்று வன்முறையையும் பிரிவினையையும் கைவிடுமாறு பல்வேறு கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு சமாதானமாகவும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழக்கூடியவொரு நாட்டை உருவாக்கி அதில் சகலரும் சமவுரிமையோடு வாழ வழிவகுப்போம்.

Related Posts