வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபனை விழாக்களில் கலந்துகொள்ள அழைப்பதற்காகவே அவரது விபரங்களை திரட்டினோம் என்று யாழ்.மாவட்ட படைகளின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபனின் ஏழாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு சனிக்கிழமை (18) காலை சென்ற இராணுவத்தினர் மூவர் கஜதீபனிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வீட்டுக்கு சென்ற இராணுவத்தினர், வசாவிளான் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவ வீரர்கள் என தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர்.
தொடர்ந்து, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா, எத்தனை குழந்தைகள்?, உங்கள் கிராமஅலுவலர் பிரிவு என்ன? போன்ற கேள்விகளை கஜதீபனிடம் கேட்டுள்ளனர்.
விசாரணை செய்தமைக்கான காரணத்தை கஜதீபன் கேட்டபோது, அது மேலிடத்து உத்தரவு என குறித்த அவர்கள் கூறியிருநடதனர்.
இது தொடர்பில் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இராணுவத்தினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு கஜதீபனை அழைக்கும் பொருட்டு அவரிடம் தரவுகள் பெறப்பட்டதாகவும் மாறாக இராணுவ விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை’ எனவும் அவர் மேலும் கூறினார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர் விசாரணை