தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன், நடிகர் கார்த்தி இணையும் படம் உறுதியாகியுள்ளது. தற்போது மல்டி ஸ்டார் படங்கள், பரவலாக எல்லா மொழிகளில் வர துவங்கிவிட்டன. தமிழில், ஆர்யா-விஷால் நடிப்பில் அவன் இவன், அஜீத்-ஆர்யா நடிப்பில் ஆரம்பம் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும் படம் ஒன்றில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜூனாவும், நம்மூரு நடிகர் கார்த்தியும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். முதலில் அந்த கதாபாத்திரத்தில் ஜுனியர் என்டிஆர் தான் நடிக்க இருந்தாராம். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர் அந்தப் படத்திலிருந்து விலகி விட கார்த்தியை அணுகியிருக்கிறார்கள்.
கார்த்தி நடித்த சில படங்கள் தமிழிலிருந்து, தெலுங்குக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளதால் அவரைப் பற்றிய பரிச்சயம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. எனவே அவரை இப்படத்திற்கு ஓ.கே. செய்துவிட்டனர். இதனை இப்படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமாஸ் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து பிவிபி சினிமாஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, முன்னணி நடிகர்களான நாகர்ஜூனா மற்றும் கார்த்தியை வைத்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் மெகா பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க இருப்பதை பெருமையாக கருதுகிறோம்.
இப்படத்தை, வம்சி பைடிபாலி இயக்குகிறார். படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. விரைவில் படம் பற்றி முழு அறிவிப்பையும் வெளியிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.