யாழ்.குடா நாட்டில் நடைபெற்ற 86 களவுகளுடன் தொடர்புடைய ஒருவர் கடந்த 25 ஆம் திகதி மானிப்பாய் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பழம் வீதி ஆணைக்கோட்டையைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு திருட்டுடன் சம்பந்தப்பட்ட குறித்த நபரை பொலிஸார் தேடிவந்த நிலையில் அவர் தலைமறைவாகியிருந்தனர். எனினும் 22பேரடங்கிய விசேட அணி ஒன்று உருவாக்கப்பட்டு அவர்களின் தேடுதலில் கடந்த 25 ஆம் திகதி புதுக்குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபரிடம் இருந்து தண்ணீர் இறைக்கும் மின் மோட்டர்கள்- 35 ,கைத்தொலைபேசி- 01, டி.வி.டி பிளேயர்-01, மடிக்கணனி -01, மோட்டார் சைக்கிள் -01, சிறியரக வாகனம் -01, துவிச்சக்கர வண்டி -01, தங்க நகைகள் -70பவுண், வங்கியில் அடகு வைத்தமைக்கான 120 பற்றுச் சீட்டுக்கள், வீட்டுத்தளபாடங்கள் , வீடியோ கமரா -01 மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் சுன்னாகம், ஆணைக்கோட்டையில் உள்ள நபரின் வீடு மற்றும் ஐந்து சந்திப்பகுதியில் இருந்தும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் மீட்கப்பட்டவற்றில் பெறுமதி மிக்கவாகனங்கள் திருடப்பட்டவை அல்ல என்றும் திருட்டு நகைகளை விற்றும் வங்கியில் அடகுவைத்துமே பணம் கொடுத்து வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விசேட தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
அத்துடன் கடந்த 12 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை , குறித்த திருட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஏழாலையை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு கடந்த முதலாம் திகதி மன்றில் முற்படுத்தியதுடன் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
திருட்டுடன் தொடர்புடைய பிரதான நபரின் குடும்பத்தினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டதுடன் மனைவி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.