பார்வையிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. அவர்களின் குடும்பங்களிற்கு வடக்கு மாகாணசபை மானிய உதவிகளை வழங்க வேண்டும் அல்லது கடன் அடிப்படையிலாவது உதவிகளை வழங்க வேண்டுமென விழிப்புலன் இழந்தோர்சார்பாக அதன் சங்க தலைவர் வி. கனகசபை முதலமைச்சரிடம் வேண்டுகோளை முன்வைத்தார்.
சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வுகள் யாழ். கைதடி விழிப்புலன் இழந்தோர் சங்க தொழில் பூங்கா வளாகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு வடக்கு மாகாணசபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதமாக விருந்தினராக கலந்து கொண்ட போது சங்கத்தலைவர் இதனை முன்வைத்தார்.
அவர்கள் சார்பில் முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் :-
பேரூந்து போக்குவரத்தில் விழிப்புலன் இழந்தவர்கள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி வருகின்றனர். பொதுவாக இவர்களை பேருந்துகள் ஏற்றுவதில்லை அவ்வாறு ஏற்றினாலும் தமெக்கென ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் இடம் கொடுக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் நடத்துனர்கள் தம்மை வேறு இடங்களிலும் இறக்கி விட்டு செல்கின்றனர். இவற்றிற்கு ஒரு தீர்வினை பெற்றுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்று இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற் பூங்கா வளாகத்தில் போதியளவு அடிப்படை வசதிகள் இல்லை பொதுவாக ஆண்கள் விடுதியில் ஒரு மலசல கூடம் மட்டுமேவுள்ளது. தமக்கு வழிபாட்டறை வசதிகள் இல்லை.
யுத்தம் காரணமாக தடுப்பில் இருந்து வந்த பார்வையற்ற இரு மாணவிகள் எமது சங்கத்தின் மூலம் சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் கல்வி கற்று இன்று பல்கலைக்கழத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவர்கள் பல்கலைக்கழகம் சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகளை செய்து தரவேண்டும்.
தமது சங்கத்தினர் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னெடுக்க மேற்கொள்ளும் கைத்தொழில் பொருட்களை சந்தைப்படுத்துவதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். காரணம் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற தரம் குறைந்த பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் அவற்றுடன் போட்டியிடமுடியாதுள்ளது.
மிக முக்கியமாக வங்கிகளில் தமது பெயர்களில் கணக்கு ஆரம்பிக்க முடியாதுள்ளது. ஆரம்பத்தில் கணக்கை ஆரம்பித்தவர்களுடைய கணக்குகள் தொடர்ந்தும் பேணப்படுகின்ற போதிலும் புதிய கணக்கை ஆரம்பிக்க முடியவில்லை. அதற்கு தமக்கு பார்வை இல்லை எனவும் உங்களால் வங்கி சட்ட திட்டங்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியாது எனவும் கூறி எங்களை ஒதுக்குகின்றனர். இவற்றிக்கு வடக்கு மாகாணசபை ஊடாக முதலமைசர் தீர்வு கண்டுதர வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மேலும் வெள்ளைப்பிரம்பு விழிப்புலன் இழந்தவர்களின் நண்பன் அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த அடிக்கு உதவி புரிகிறது அதனால் அதனை கொண்டு வருபவர்களிற்கு மரியாதை கொடுங்கள் ஆனால் உதாசினப்படுத்தாதிர்கள் என உருக்கமாக மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டார்.