வவுனியா, பசார் வீதியில் வைத்து நேற்று (13) இரண்டு வயது சிறுமி ஒருவர் கடத்தபட்டிருந்த நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் இரண்டரை மணிநேரத்தில் குறித்த சிறுமியை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்சினி என்பவர் தனது இரண்டு வயது மகளுடன் வவுனியா பசார் வீதியில் உள்ள அடைவுக்கடை ஒன்றிற்கு நேற்று மதியம் 11 மணியளவில் வந்துள்ளார். குறித்த பெண் அடைவுக் கடையில் நின்ற போது அவருடைய தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. தான் லோஜி பேசுவதாகவும் குறித்த பெண்ணின் கணவருடைய நண்பி எனவும், நானும் தங்கள் கணவரின் நாடாகிய துபாயில் இருந்தே வந்துள்ளேன் எனவும் கூறியதுடன் எங்கு நிற்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது குறித்த பெண் தான் வவுனியா நகரில் நிற்கும் கடையின் பெயரைக் கூறியுள்ளார். உடனடியாக குறித்த பகுதிக்கு வந்த அந்தப் பெண் தன்னை அறிமுகப்படுத்தியதுடன் சிறுமியையும் தூக்கி வைத்திருந்துள்ளார். இதன் போது சிறுமியை அப் பெண்ணுடன் விட்டுவிட்டு தர்சினி அடைவு கடைக்குள் நின்ற போது அந்த பெண் சிறுமியுடன் மாயமாகியுள்ளார்.
சிறிது நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனக்கு தர்சினியின் கணவன் 5லட்சம் ரூபாய் தரவேண்டும். அதனைத் தந்தால் சிறுமியை விடுவேன் எனவும் அல்லது காசு இரண்டு லட்சமும் மிகுதி மூன்று லட்சத்திற்கு நகையும் தா சிறுமியை விடுகிறேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து 11.50 மணியளவில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலிசாரின் துரித செயற்பாட்டின் மூலம் குறித்த பெண் சிறுமியுடன் பயணித்த ஆட்டோ சாரதி கண்டிபிடிக்கப்பட்டு அவரை விசாரணை செய்த போது அப் பெண்ணையும் சிறுமியையும் மன்னார் வீதியில் உள்ள காமினி வித்தியாலயம் முன்பாக இறக்கிவிட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவ் இடத்திற்கு சென்ற பொலிசார் அவ் வீதி வழியாக சென்ற பஸ்களை இலக்கு வைத்து தேடிய போது வவுனியா தாலிக்குளம் பகுதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டு பிற்பகல் 2.20மணியளவில் தாயிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு தாயுடன் அனுப்பப்பட்டுள்ளார். சிறுமியை கடத்திய 24 வயது யுவதி கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னரே துபாயில் இருந்து வந்தவர். இவரை தற்போது தடுத்து வைத்துள்ளதுடன் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேலும் மெதரிவித்தார்.