இலங்கையில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பல எனக்கே ஆதரவானவை. எனவே இலங்கை அரசியலில் நானே பொதுவேட்பாளர். இவ்வாறு தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாக தான் போட்டியிடுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பொல்ஹாவெலவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கரந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:-
எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்கள் தாமே பொது வேட்பாளர்கள் என்று கூறிவருகின்றனர். உண்மையில் அவர்கள் பொதுவேட்பாளர்கள் இல்லை. அவர்கள் அந்தந்தக் கட்சிகளின் தனித்துவமான வேட்பாளர்களே. ஆனால் இலங்கை அரசியலில் எமது கட்சியுடனேயே அதிகமான அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எனவே நானே பொதுவேட்பாளர் ஏன்ற தகைமை உடையவன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் மூன்றாவது தடவையாகப் போட்டியிடுவேன்.
எதிர்கட்சிகள் என்னதான் காரணம் கூறினாலும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கில்லை. ஆனால் எமக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருக்கிறது. தேர்தலில் நாமே வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி பற்றி பேசிவந்தன. ஆனால் நாம் அபிவிருத்தியைச் செய்திருக்கிறோம். புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளும் இணைக்கப்பட்டு, இன்று இலங்கை சுருங்கிவிட்டது. அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ளாத எதிர்த்தரப்பினர், அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆனால் பொதுமக்களுக்கு உண்மை என்னவென்பது நன்றாகத் தெரியும். குறிப்பாக சீனாவுடன் இணைந்து நாம் மேற்கொண்ட அபிவிருத்திகளைக் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை நாம் பொருட்படுத்தவில்லை. இனியும் பொருட்படுத்தப்போவதில்லை. நாட்டின் அபிவிருத்தி தொடரும். – என்றார்.