யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.6 வீத நிலப்பரப்பு அதாவது 13 ஆயிரத்து 588 ஏக்கர் நிலப்பரப்பு, இராணுவத்தினர் வசம் தற்போது இருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா கூறினார்.
வடமாகாண காணி பிரச்சினைகள் தொடர்பிலான விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்றது. இதில் முப்படைகளும் வடக்கிலிருந்து இவ்வருட இறுதிக்குள் வெளியேறவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த தீர்மானம் தொடர்பில் உரையாற்றுகையிலேயே தவராசா இந்த தகவலை வெளியிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
2009ஆம் ஆண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 12.8 வீதம் அதாவது 31 ஆயிரத்து 91 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசம் இருந்தது. அத்துடன், பொதுமக்களின் 1120 வீடுகளும் இராணுவத்தினரிடம் இருந்தது.
தொடர்ந்து யுத்தம் முடிவடைந்த பின்னர் நிலப்பரப்புக்களும் வீடுகளும் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டன. அந்த வகையில் 17 ஆயிரத்து 503 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டதுடன், 647 வீடுகள் வீட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
மத்திய அரசாங்கத்துடன் எதிரும் புதிருமாக இருந்தால் எவ்வித காரியங்களையும் சாதிக்க முடியாது. இணக்கப்பாட்டுடன் நடந்துகொண்டால் மாத்திரமே நன்மைகளை பெறலாம். பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் மீண்டும் கையளிக்கப்படவேண்டும் என்பதில் நாங்களும் பெரு விருப்பம் கொள்கின்றோம்.
1999ஆம் ஆண்டு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது, யாழ்ப்பாணத்தில் 12 ஆயிரம் ஏக்கர் காணிகள் சுவீகரிப்பதற்கு வர்த்தகமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.
அதன்போது, எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வசம் 9 நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தனர்கள். அவர்கள் சந்திரிக்காவிடம் காணி சுவீகரிப்பது தொடர்பிலான வர்த்தகமானி அறிவித்தலை நீக்கும்படி கோரியிருந்தோம். அதற்கமைய அந்த வர்த்தகமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டது.
அவ்வாறானதொரு இணக்கமான நடவடிக்கைகள் மூலம் எங்கள் நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
காணி அதிகாரம் மத்திய அரசிற்கு சொந்தமானது என்று உயர் நீதிமன்றமே கூறியுள்ளது. இந்நிலையில் எவ்வாறு வடமாகாணத்திற்கு அந்த உரிமையை பெற்றுக்கொள்வது என தெரியவில்லையென அவர் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்தி
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் 67,000 ஏக்கர் காணி – சி.வி.கே.சிவஞானம்