வடமாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து அநாதரவாக உள்ள வீடற்ற வறிய மக்களுக்கென வீட்டுத்திட்டங்களை வழங்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. இதன் முதற்செயற்பாடாக சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடங்கிய காசோலையினை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஹாசிம் ஹூரேசி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீனும் உடனிருந்தார். இவ்வாறான பாகிஸ்தான் அரசாங்கத்தின் உதவிகளுக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக இரு அமைச்சர்களும் தெரிவித்ததுடன், நிதித்தொகையானது வடமாகாணத்திலுள்ள மன்னார் மாவட்ட புதுக்குடியிருப்பு, நரிக்காடு, மொட்டைக்கடை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கான 220 வீட்டுத்திட்டங்களை நிர்மாணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த உயர் ஸ்தானிகர் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் இன்று நேற்றல்ல தொடர்ந்தும் நல்லதொரு நட்புறவுக் கொள்கைகள் பாராட்டப்பட்டு வருகின்றன, உயர்மக்களின் வருகை, பலமான ஆதரவு, வர்த்தக பொருளாதார கொள்கைகள், மற்றும் சர்வதேச தொடர்பு ஆகியன பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.