அரசு இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகிறது; அமெரிக்க பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு

முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என அரசு கூறிவந்தாலும் இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றது என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vicky0vickneswaran

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரிகள், மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக பிரதிநிதி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அந்தவகையில் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் வடக்குமாகாண முதலமைச்சரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலை குறித்து அறிந்து கொண்டனர். அதன்போதே அவர்களுக்கு தான் மேற்கண்டவாறு தெரிவித்தாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிந்து விட்டது வடக்கு கிழக்கில் சமாதானம் நிலவுவதாக கூறும் அரசு இன்னமும் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனிக்காத அரசு, பெருமெடுப்பில் அபிவிருத்திகள் குறித்தே கவனம் செலுத்துகிறது.

மேலும் வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள், மாகாணசபையை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

சர்வதேச அழுத்தம் காரணமாகவே வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அதன்மூலம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையை சுமுகமாக செயல்படுத்துவதற்கு அனுமதி இல்லை.

அரசு வடக்கில் நடக்கும் எல்லாவற்றையும் தாமே செய்கிறோம் என்று காட்டவே முற்படுகிறது. இன்னும் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறது. வடக்கு மாகாணத்துக்கு என இருக்கவேண்டிய அதிகாரத்தை கூட வழங்குவதற்கும் தயாராக இல்லை. மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பிரகடனப்படுத்தினாலும் அது தமிழ் மக்கள் பகுதிகளில் நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை.

மேலும் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்தும் பொய்யான தகவல்களையே அரசு வெளியிட்டுவருகிறது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள்ளேயே நாம் செயற்பட்டுவருகிறோம் என்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தான் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

Related Posts