வெளிநாட்டிலுள்ள இளைஞர்கள் கஷ்டப்படுகின்றனர் -முதலமைச்சர் சி.வி.

பொறியியலாளர் வேலை செய்கின்றேன் எனக்கூறி வெளிநாடுகளில் கழிவு அறைகளை சுத்தப்படுத்திவரும் பணத்தில் பெரும் பகுதியை இங்கு (இலங்கை) தமது உற்றார்களுக்கு அனுப்பும் இளைஞர்களை வெளிநாடுகளில் சந்தித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

vickneswaran-vicky-Cm

கைதடி அரச முதியோர் இல்லத்தில் நடைபெற்ற சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (07) மாலை கைதடி அரச முதியோர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘கழிவு அறை எந்திரிகள் என்றுதான் அவர்களை அங்கு கூப்பிடுவார்கள். ஆகவேதான் அவர்கள் தங்களை பொறியியலாளர்கள் என்று கூறுகின்றனர். அதில் தவறு ஏதும் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு, மூன்று வேலைகள் செய்து உழைத்த பணத்தையே ஊருக்கு அனுப்புகின்றார்கள். இது இங்கு நன்மை பெறும் நம்மவர்களுள் பலருக்கு புரிவதில்லை.

சர்வதேச முதியோர் வாரத்தின் கடைசி நாளன்று முதியோர் மத்தியில் பேச முதியவர் ஒருவரை (என்னை) அழைத்தமை சால பொருத்தமானதே.

உடல் முதுமையிலும் உள இளமையுடன் வாழலாம் என்பதை நாங்கள் மறக்கக்கூடாது. முதுமை ஒரு வரப்பிரசாதம். எமது உள்ளத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதுதான் முக்கியம். அந்த மனோநிலைதான் உங்களை மேன்மையான ஒரு நிலைக்கு இட்டு செல்கின்றது.

அந்த மனோநிலையை நடைமுறைப்படுத்தும் விதம் வேறுவேறாக அமையலாம். பணத்தால் சேவை புரியலாம். மனத்தால் சேவை புரியலாம். உடலால் சேவை புரியலாம். உற்ற கல்வியால் சேவை புரியலாம். வெறுமனே நிஷ்டையில் இருந்து எல்லா உயிர்களும் அன்புடன், அமைதியுடன், மகிழ்வுடன் வாழ இடமளிப்பாய் இறைவனே என்று பிரார்த்தனை செய்வது கூட மக்கள் சேவையேயாகும்.

ஆகவே எமது முதியோர் நிலையில் நாங்கள் சேவைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். எமது பிள்ளைகள் எங்களை பார்க்க வரவில்லையே, எங்களை தனிமையில் தள்ளி விட்டார்களே என்று மனம் அங்கலாய்ப்பது முதுமை நிலைக்கு அழகல்ல’ என்றார்.

Related Posts