அரசின் நல்லிணக்கம் பேச்சளவிலேயே செயற்பாடுகளில் எவையும் இல்லை!

“யுத்தம் நிறைவடைந்த சூழலிலும் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டாலும் அதனை ஏற்படுத்துவதற்குரிய செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளவில்லை. நல்லிணக்கத்தை ஏற்படுத்த விரும்பாத செயற்பாடுகளே தொடர்கின்றன. இந்நிலையில் பாப்பரசரின் இலங்கை விஜயம் துன்பப்படும் மக்களுக்கான குரலாக அமையும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.” – இவ்வாறு மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் தெரிவித்தார்.

mannar-ayar

வத்திக்கானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரடியாகச் சந்தித்து இலங்கைக்கு வருகை தருமாறு உத்தியோகபூர்வமான அழைப்பை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி மஹிந்த, இலங்கை வாழ் மக்களை சந்தித்துக் கருத்து வெளியிடுகையில் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”

யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன. இருந்தபோதும் யுத்தகாலத்தில் மக்கள் துன்பப்பட்டதைப்போன்றே தற்போதும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றார். அந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. வீதிகள் அமைக்கப்படுகின்றன. கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இவற்றினால் எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை.

பொதுமக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாக அமையவில்லை. இந்த நாட்டில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. குற்றம் செய்தவர்களே நீதிபதிகளாக இருக்கும் துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.

சட்டம் ஒழுங்கு தொடர்பில் பக்கச்சார்பற்ற செயற்பாடுகள் காணப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக நீதி, நியாமில்லாத நிலைமைதான் இங்குள்ளது. யுத்தத்தின் போதும், அதற்கு பின்னரான சூழ்நிலையிலும் பலர் காணமல்போயிருக்கின்றார்கள். எத்தனையோ பொதுமக்கள் தமது உறவுகளை படைத்தரப்பிடம் நேரடியாக கைளித்திருக்கின்றார்கள். இன்று வரை இவர்கள் எங்கே என்பது தெரியாதுள்ளது. அது தொடர்பில் எத்னையோ தடவைகள் கேள்வியெழுப்பப்பட்டும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் உரிய பதில்கள் இன்று வரையில் கிடைக்கவில்லை. இதற்குரிய பதிலை கூறவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. காணமல்போனோரின் உறவினர்களுக்கு வாழ்வாதரத்தை முன்னேற்றுவதற்காக ஆடுகளையும், ஒருதொகை பணத்தையும் வழங்கு முனைகின்றார்கள். அந்த உறவுகள் இவற்றை எதிர்பார்க்கவில்லை. இந்தச் செயற்பாடுகள் துன்பத்திலிருப்பவர்களை மேலும் துன்பப்படுத்துவதாகவே இருக்கின்றது.

நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் அரசால் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தார்கள். ஆணைக்குழு முன்னிலையில் பல்வேறு சாட்சியங்கள் பதியப்பட்டிருக்கின்றன. இறுதியில் ஆணைக்குழு தனது அறிக்கையையும் சமர்ப்பித்து விட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்குழுவிற்கு தலைமையேற்று பங்கேற்றிருந்த மகிந்த சமரசிங்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் 95 சதவீதமான விடயங்கள் பூர்த்தியாக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார். பின்னர் இந்த வருடம் இலங்கைக்குழுவிற்கு தலைமையேற்று ஜெனிவா சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் 35 சதவீதமான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறுகின்றார்.

ஆனால், உண்மையிலேயே இங்கு எந்தவிதமான செயற்பாடுகளுமே முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்போது ஜனாதிபதியின் காணமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றது. இந்த ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பவர்களுக்கு கூட பாதுகாப்பு உத்தரவாதமில்லாத நிலைமையே காணப்படுகின்றது. புலனாய்வர்கள் என்ற போர்வையில் உள்ளவர்களால் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

அதேபோன்று தான் சர்வதேச விசாரணைக்கான சாட்சியமளிப்பதிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன. சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது யாருடைய கடமை என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். இவ்வாறான அச்சுறுத்தல் நிலைமையால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு முன்வந்து சாட்சியமளிப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுமக்களின் நிலைமை இவ்வாறிருக்கையில்தான் பாப்பரசர் பிரான்சிஸ் இங்கு வருகை தரவுள்ளார். அதற்கான அழைப்பு ஜனாதிபதியால் விடப்பட்டிருக்கின்றது. அதேநேரம் வத்திக்கானில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு முக்கி சில விடயங்கள் குறித்து பாப்பரசர் தனது கருத்துக்களை கூறியிருப்பார் என்பது நிச்சயமானது.

காரணம் முன்னதாகவே நாம் பொதுமக்களின் நிலைமைகளை உள்ளடக்கி ஒவ்வொரு மறைமாவட்ட ஆயர்களும் பாப்பரசரிடம் மனுக்களைச் சமர்ப்பித்திருக்கின்றோம். ஆகவே அவர் அவை தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பார்.

அரச தரப்பு தொடர்ச்சியாக சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லையென்றே கூறி வருகின்றது. உண்மையில் அவர்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்கள் விரும்பவில்லை. அதற்கு அவர்களின் செயற்பாடுகளே உதாரணமாக அமைகின்றன. இந்நிலையில், தேசிய நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை பற்றிப் பேசமுடியாது. எவ்வாறாயினும் இலங்கைக்கு விஜயம் செய்யும் பாப்பரசர் பிரான்சிஸ் துன்பப்படும் மக்களுக்காகவே பேசுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதன் மூலம் நல்லிணக்கம் தொடர்பான திருப்புமுனை ஏற்பட வாய்புக்களும் உருவாகலாம்” – என்றார்.

Related Posts