முறையற்ற விதத்தில் தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு, தனது கையைத் துண்டிக்க காரணமான இரு வைத்தியசாலைகளின் ஊழியர்கள் செயற்பட்டனர். எனவே அரசாங்கள் தனக்கு 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும்.
இவ்வாறு சட்டத்தரணி ஊடாக மாத்தறை கீகொடவை சேர்ந்த அச்சலா பிரியதர்சினி என்ற கொழும்பு பல்கலை சட்டத்துறை மாணவி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மாத்தறை மற்றும் கொழும்பு வைத்தியசாலைகளின் அலட்சியம் காரணமாகவே தனது கை துண்டிக்கப்பட்டது என்று அவர் தனது முறைப்பட்டில் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி அருட்பிரகாசம் ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் எதிரிகளாக மாத்தறை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை இயக்குநர்கள், சுகாதார சேவையின் செயலாளர் நாயகம், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தவறிவிழுந்ததினால் கை முறிவு ஏற்பட்டு தான் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ள யுவதி, அங்கிருந்து கை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே தான் வெளியேறினார் என்றும் தெரிவித்துள்ளார்.
மாத்தறை மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை ஊழியர்கள், தான் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை உரிய முறையில் மருத்துவ சேவையாற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு சட்டத்துறை மாணவியான இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் விடுதி மாடியிலிருந்து தவறிவீழ்ந்தார். இடதுகையில் முறிவு ஏற்பட்டு குறித்த மாணவி மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 22ஆம் திகதி கை அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.