த.தே.கூ.வினால் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது – டக்ளஸ்

தமது சுயலாபத்துக்காக மாறுபட்ட கருத்துக்களை கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது’ என பாரம்பறிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அல்லைப்பிட்டி, வெண்புரவி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

dr6

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘நாம் அரசுடனான நல்லுறவு மற்றும் இணக்க அரசியல் ஊடாக பல்வேறுபட்ட அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதவர்களாகவும் விரும்பாதவர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திராணியில்லாதவர்களாக விளங்கும் கூட்டமைப்பினர் வடமாகாண சபையை கைப்பற்றி ஒராண்டு நிறைவு பெறுகின்ற நிலையில் ஒன்றையேனும் செய்ய முடியாதவர்களாக இருப்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

தமது சுயலாபங்களுக்காக முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறிவரும் கூட்டமைப்பினரால் ஒருபோதும் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாது’ என்றும் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் மின்சாரம், வீதிப் புனரமைப்பு, விவசாயத்துக்கான உதவிகள், சமுர்த்தி உதவி, நன்னீரைப் பாதுகாக்கும் திட்டம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்துக்கான கட்டிடம் போன்ற கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டன.

இவற்றை ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

இதேவேளை, வேலணை பிரதேச சபையால் புனரமைப்பு செய்யப்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி வீதியை அமைச்சர் உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளித்தார்.

Related Posts