போரால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களிலும் நிம்மதியாக வாழவிடப்படவில்லை.என சிரேஸ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவித்தார்.
நேற்று பி.ப 3.30 மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் குமார் பொன்னம்பலம் அவர்களது 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த நினைவு பேருரையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்ற தொனிப் பொருளில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,
கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த போரிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றே நம்பி வாழ்ந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப் பெறவில்லை.
2009ம் ஆண்டு போரின் பின்னர் தமிழ் மக்கள் தாங்கள் அதல பாதாளத்தில் இருப்பதை உணர்ந்தார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் மரணிக்கப்பட்டன.இருந்த நிலங்களை இழந்து வாழ்வாதாரங்களை பறிகொடுத்து உறவினர்களை கண்முன்னாலே இழந்து நிர்க்கதிக்குள்ளானார்கள்.
இலங்கை அரசாங்கம் மிகவும் தந்திரமாக ஐக்கிய நாடுகள் நிறுவனங்களையும், சர்வதேச தொண்டு நிறுவனங்களையும், ஊடகவியலாளர்களையும் போர் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றி சாட்சிகளற்ற போரினை நிகழ்த்தி வரலாறு காணாத போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் அரங்கேற்றியது. மேலும் இலங்கை அரசு கனரக வாகனங்கள், புல்டோசர்கள் போன்ற அசுர இயந்திரங்களால் மக்களின் செறிவின் அடையாளங்கள் தரைமட்டமாக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பெரும்பான்மையினவாதத்தின் உண்மை சொரூபம் வெளிப்பட்டது.ஆடிப்பாடி களியாட்டம் நடத்தி வீதிகளில் பாற்சோறு சமைத்து விநியோகித்து மகிழ்ந்ததுடன் நின்று விடவில்லை.தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும்,துயரங்களையம் கண்டு களிப்பதற்காக வடபகுதிக்கு தென்பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கினர்.
பாதிக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களிலும் நிம்மதியாக வாழவிடப்படவில்லை. விசாரணை, விளக்கம் என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனவர்கள் ஒருபுறம், நோய், பசிபட்டினியால் உயிர்நீத்தோர் ஒருபுறம், பொலிஸ் -இராணுவ பாலியல் கொடுமைகளுக்கும், துஸ்பிரயோகங்களுக்கும் உள்ளாகிச் சருகாகிப்போன யுவதிகள், சிறுவர்கள் ஒருபுறம் இதனால் சட்டத்தரணிகள் மூலம் மனித உரிமைகள் வழக்குகள் உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட இலங்கை அரசுக்கு எதிரான வழக்கு எதுவித சட்ட ரீதியான காரணமுமின்றி தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாதுகாப்பு தாரப்பினருக்கு உரிமை இருக்கிறது என்ற வகையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் தான் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளும், சித்திரவதைகளும் வெளியுலகத்துக்கு மெல்லக் கசியத் தொடங்கியது.
இதன் விளைவாக தான் ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்து அந்த அறிக்கை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது.அதாவது தமிழ் மக்களுக்க இழைக்கப்பட்ட கொடுமைகளை விபரமாக வெளியிட்டது.
அதாவது சர்வதேச சட்டங்களை மனிதாபிமானச் சட்ட விதிமுறைகள் என்பவற்றை எல்லையற்ற வகையில் இலங்கை அரசாங்கம் மீறியுள்ளன.என்பதற்கு சான்றுகள் கிடைக்கப் பெற்றன.
இதில் செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்ட பிரதிமைகளும் சனல் 4 போன்ற ஊடகங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களும் இதனையே வலியுறுத்துகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த சூழ்நிலையிலும்,உத்தியோகபூர்வமாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதுவும் பாதிக்கப்பட்ட அல்லலுறும் மக்களால் அபரீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாக வடமாகாண சபை விளங்குகின்றது.
வடமாகாணத் தமிழ் மக்கள் தங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்தினையும் பொருட்படுத்தாது மாகாண சபையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். வெறுமனே பேச்சவார்த்தையில் ஈடுபட்டு காலத்தையும் போக்கி மூக்குடைபட்ட உதாரணங்கள் சமீபத்திய அரசியல் வரலாற்றில் உண்டு .
இலங்கை அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கியோ,கானல் நீரில் மூழ்குவதும் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படை கோரிக்கையிலிருந்து விலகுவதும் தமிழ் இனம் முழுவதற்கும் இழைக்கப்படுகின்ற மாபெரும் துரோகம் என அவர் சுட்டிக்காட்டியதுடன் அரசுக்கு எதிராக உள்ள ஒரே ஒரு சவால் ஐ.நா முன்னெடுக்கும் சர்வதேச விசாரணையே என அவர் மேலும் தெரிவித்தார்.