அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர்,யாழ் நகரில் குறிப்பிட்டுள்ள அதேவேளையில் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி, நீதிமன்ற அனுமதியை கோருவது கவலைக்குறியது
என சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மேல் நீதிமன்றில் வாதிட்டார்.
யாழ். அச்சுவேலி வடக்கு அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமராச்சி கிழக்கு மருதங்கேனியில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமைபுரிந்த நாகலிங்கம் மதனசேகர் என்பவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு வாதிட்டார்.
2008ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் மாதம் 16ஆம் திகதி, கொழும்பு புறக்கோட்டையில் WP NA- 3656 என்ற இலக்கமுடைய பஸ் வண்டிக்கு குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த பயணிகளை கொலை செய்வதற்கு எத்தனிதமை, அசையும் அசையா ஆதனமொன்றிற்கு இழப்பை ஏற்படுத்தி அதனை அழித்தவிடும் செயலை புரிந்ததாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவசரகால ஒழுங்கு விதிகளின் 25(1)ஆம் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடிய குற்றத்தைப் புரிந்ததாக 13 தடயப்பொருட்களையும் 36 அரசசாட்சியங்களையும் உள்ளடக்கி சட்டமா அதிபரினால் இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் 23ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி நியோமி விக்கிரமசிங்க தனது வாதத்தில்,
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகலிங்கம் மதனசேகர் என்பவர் கொழும்பில் பஸ் குண்டுத்தாக்குதலை நடாத்துவதற்கு முயன்றுள்ளார்.
யுத்த காலத்தில் தப்பிச்சென்று தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் வசித்துவரும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த முகந்தன் என்பவரே இத்தாக்குதல் நடத்த நிதிஉதவி வழங்கியதுடன் இந்தத் குண்டுத் தாக்குதலை நடாத்த உத்தரவும் இட்டுள்ளார்.
எனவே, இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாகலிங்கம் மதனசேகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரத்தை மீளப்பெற்று நாகலிங்கம் மதனசேகர், மற்றும் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த முகந்தன் ஆகிய இருவருக்கும் எதிராக புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட எதிரி தரப்பில் ஆஜராகியிருந்த சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, அரச தரப்பின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.
இந்த வழக்கில் எதிரியாக பெயர்குறிபிடப்பட்டுள்ள நாகலிங்கம் மதனசேகர் என்பவர் 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த வேளையில் 2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரின் வேண்டுகோளையடுத்து பயங்கரவாதத் தடைப்பிரிவுத் தலைமையத்திற்கு சென்ற வேளையிலேயே கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக பயங்கரவாதத் தடைப் பொலிசாரினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை நடாத்திய பின்னர் 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் 23ஆம் திகதி சட்டமா அதிபரினால் அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்காக 2014ஆம் ஆண்டு ஆனி மாதம் 23ஆம் திகதி அரச சாட்சியங்களுக்கு நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவுசெய்த பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா உட்பட சகல சாட்சிகளும் நீதிமன்றில் சாட்சியமளிக்க சமூகமாகியிருக்கும் வேளையில் அரச சட்டத்தரணி புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய நான்கு மாதம் தவணை கோரியிருந்தார் .
நீதிமன்றமும் அரச சட்டத்தரணியின் விண்ணப்பத்தையேற்று புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்ய நான்கு மாத காலம் தவணை வழங்கியது. ஆனால், புதிய குற்றச்சாட்டுப்பத்திரத்தை தாக்கல் செய்யாமல் மேலும் மூன்றுமாத தவணை கோருவது சட்டமா அதிபர் திணைக்களம் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குக்களை முடிவிற்கு கொண்டு வராமல் நியாயமற்ற முறையில் காலம் கடத்துவது மிகத் தெளிவாகின்றது என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் நாகலிங்கம் மதனசேகர், மூன்று வருடங்களுக்கு மேற்பட்டகாலம் பிணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்காமல் பிரான்ஸ் நாட்டிலிருக்கும் முகந்தன் என்பவரை சர்வதேச பொலிசார் மூலம் கைது செய்து இந்த நாட்டிற்கு கொண்டுவந்து புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரச சட்டத்தரணி நீண்ட கால அவகாசத்தை கோருகின்றார்.
பயங்கரவாத்தடைச் சட்டத்தில், மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட எனது நீண்டகால சட்டத்துறை அனுபவத்தில் இலங்கைக்கு வெளியேயிருந்து புலிகள் என சர்வதேச அரசுகளின் அனுசரணையுடன் கைது செய்யப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட எந்தப் புலி உறுப்பிணர்களும் நீதவான் நீதிமன்றிலோ அல்லது மேல் நீதிமன்றிலோ ஆஜர் படுத்தப்படவுமில்லை அவர்களுக்கு எதிராக இன்றுவரை எந்த வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுமில்லை.
அரசியல் கைதிகளை பொது மன்னிப்பபு வழங்கி விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக சட்டமா அதிபர், யாழ் நகரில் குறிப்பிட்டுள்ளதாக இலந்திரணியல் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகின.
ஆதலால், அரசியல்கைதிகள் தங்களுக்கு பொது மன்னிப்பு கிடைத்துவிடும் தாங்கள் குடும்பத்துடன் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இவ்வாறான நிலையில், சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணைகளை முடிவிற்குகொண்டுவர நீதிமன்றிற்கு ஒத்துழைக்காமல் புலிகள் என்ற போர்வையில் புதிய வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அரச சட்டத்தரணி நீதிமன்ற அனுமதியை கோருவது வியப்பிற்கும் கவலைக்கும் உரியது என்று தனது வாதத்தில் தவராசா குறிப்பிட்டார்.
மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன், சட்டமா அதிபருக்கு புதிய குற்றச்சாட்டுப்பத்திரம் தாக்கல் செய்ய இறுதித் தவணையாக ஜந்து வார காலத்தை வழங்கியதுடன் புதிய குற்றச்சாட்டுப்பத்திரம் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படாவிடின் நாகலிங்கம் மதனசேகருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை கார்த்திகை மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.