இன்றைக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டிஷோ, டாக் ஷோக்களில் ஏதாவது ஒரு சண்டையை இழுத்து கண்கலங்க நடுவர்கள் வெளியேறுவது அடிக்கடி நடக்கிறது.
இந்த சண்டைகள் நிஜமா, இல்லை டிஆர்பிக்காக போலியாக நடத்தப்படுகிறதா என்ற கேள்விகள் பார்வையாளர்களுக்கு எழாமல் இல்லை.
ஆனால் இவை போலிதான் என்று இதுபோன்ற ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி சண்டையில் பங்கேற்ற பப்லு என்ற பிரிதிவிராஜ் கூறியுள்ளார்.
7 வருடங்களுக்கு முன்பாக, 2007-ம் வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் சீசன் 1′ தொடரில் நடிகர் பப்லு என்னும் பிருத்விராஜ் கலந்து கொண்டு நடனமாடினார்.
அந்த நிகழ்ச்சியில் நடுவராக அமர்ந்திருந்த நடிகர் சிம்புவுக்கும், பிருத்விராஜுவுக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்து அது பெரிய அளவிலான வாதமாகி.. சிம்பு பட்டென்று “நான் இனிமேல் இங்கே வர மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு கண் கலங்கி அழுது! அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.
இந்த சண்டையின் போது அழுத சிம்பு எனக்கு நடிக்கத் தெரியாது என்று அடிக்கடி கூறினார். அதை இப்போது ரசிகர்கள் கிண்டலடிக்கின்றனர்.
தமிழ்நாடே அடுத்த இரண்டு நாட்களுக்கு இதைத்தான் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் “இது அனைத்துமே பக்கவாக பிளான் செய்து நடித்த நடிப்புதான். உண்மையில்லை” என்று அந்த மேடை நாடகத்தில் நடித்த நடிகர் பிரித்விராஜ் கூறியுள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு பிருத்விராஜ் அளித்துள்ள பேட்டியில், அளித்திருக்கும் அந்தப் பேட்டியில், “அந்தச் சண்டையை நாங்கள் முன்கூட்டியே திட்டம் போட்டுத்தான் அரங்கேற்றினோம். அது உண்மையான சண்டையில்லை.
அந்த எபிசோட் ஒளிபரப்பான இரவு, குறிப்பிட்ட அந்த டான்ஸ் புரோகிராமின் டி.ஆர்.பி. ரேட்டிங் ஓவர் நைட்டில் 27 பாயிண்ட்வரையிலும் உயர்ந்தது. சின்னத்திரை வரலாற்றிலேயே ஒரே நாளில் இவ்வளவு பாயிண்ட் உயர்ந்த ஒரே ஷோ, அந்த எபிசோடுதான்.
அதில் ஒரு சதவிகிதம்கூட உண்மையில்லை. சுற்றிலும் 13 கேமிராக்கள் இருக்கும்போது நடக்குற சண்டைல எப்படி உண்மையிருக்கும்…? முழுக்க முழுக்க பிளானிங் ஷோ அது. நாங்க சண்டை போடும்போது ‘ஸார் சண்டை போடாதீங்க’ன்னு செட்ல யாரும் சொல்ல மாட்டாங்க.. ‘சார் லைட் இருக்கு. அங்க நின்னு சண்டை போடுங்க.. மைக் சரியா வைச்சு சண்டை போடுங்க’ன்னுதான் சொல்வாங்க.
இதுல எங்க நிஜம் இருக்கும்..? நடிக்கன்னு வந்துட்டோம்.. மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?” என்று அப்போது நடந்த உண்மையை இப்போது ஏழாண்டுகள் கழித்து சொல்லியிருக்கிறார்.
டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டு.. விளம்பர வருவாயையும் பெருக்கிக் கொண்ட விஜய் டிவி மட்டுமல்லாது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் இதுபோன்ற அடிதடிகள் அடிக்கடி அரங்கேறுகின்றன.
பிரபலங்களை ஒருவரை மோத விட்டு அதை பெரிதாக்கி.. அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த தொடர்ந்து முன்னோட்டம் போட்டு தங்களது டி.ஆர்.பி.யை உயர்த்திக் கொண்டு காசு பார்க்க பயங்கரமான வியாபார தந்திரங்களை செய்கின்றன. இனியும் இவர்களை நம்பி ஏமாறாமல் நேயர்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.