முல்லைத்தீவு வட்டுவாகல், நந்திக்கடல் மற்றும் வடக்காறு பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மீன்கள் இறந்து கரையொதுங்கி வருகின்றன.
இது வரை சுமார் 60 ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட சிறிய வகை மீன்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன. வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் அமைப்பால் கரையொதுங்கிய மீன்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் கருத்தில் எடுத்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மீனவ குடும்பங்களுடனும் உரையாடியுள்ளார்.
எனினும் குறித்த பகுதி சுனாமிக்குப் பின்னர் ஆழம் குறைந்து விட்டதாகவும் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்தினால் இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் சரியான விபரம் தெரியவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பில் மாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி அபிவிருத்திக்கான நிறுவனம் பரிசோதனைக்கான மாதிரிகளை எடுத்துச் சென்றதாகவும் முடிவுகள் ஒரு வாரத்திற்குள் தெரியவரும் என்றும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.