மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கயானா, லிபரா, சியராலியோன் ஆகிய நாடுகளில் ஆட்கொல்லி “எபோலா” நோய் வேகமாக பரவி வருகிறது.
இந்த எபோலாவுக்கு இந்த ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டார்கள். இவ்வாறு எபோலாவுக்கு தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் பறிகொடுத்த குழந்தைகளைப் பராமரிக்க ஆள் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த மூன்று நாடுகளில் 3ஆயிரத்து 700 குழந்தைகள் அநாதையாகிவிட்டனர் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியகம்(யுனிசெப்) தகவல் வெளியிட்டு உள்ளது.
இது பற்றி யுனிசெவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எபோலா தாக்கி தாய், தந்தையை இழந்து விட்ட குழந்தைகளை அவர்களின் உறவினர்களே கைவிட்டு விடுகிறார்கள். இதனால் குழந்தைகள் உணவு, உடை இல்லாமல் தவித்து வருகிறார்கள். உறவை விட மக்கள் எபோலாவுக்கு மிகவும் அஞ்சுகிறார்கள்.
இப்படி அநாதையாகி விடும் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு உள்ளது. இதற்காக நிதி உதவியை யுனிசெவ் எதிர்பார்த்து உள்ளது. இதற்காக 20 கோடி டொலர் உதவி தேவை என்று கூறியிருந்தது. ஆனால் இதுவரை 25 சதவீத உதவிதான் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் எபோலாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை மருத்துவர்கள் கண்டுபிடித்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வரும் தகவலை டெக்சாஸ் சுகாதாரத்துறை மருத்துவமனை வெளியிட்டு உள்ளது.
அவர் எபோலாவால் பாதிக்கப்பட்ட லிபரா நாட்டில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா திரும்பினார். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சந்தேகத்தின் பேரில் சோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தார். சோதனையில் அவரது உடலில் எபோலா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தனிவார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், எபோலாவால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்து விட்டார்கள். குறிப்பாக லிபராவில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எபோலாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.