நவுரு தடுப்பு முகாமில் பெண்களும், சிறுவர்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள குளியலறைக்குச் செல்ல வேண்டுமாயின் ஆடை களைந்தும், பாலியல் இச்சைகளுக்கு உடன்பட்டும் காவலாளிகளைத் திருப்திப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்கொள்வதாக பசுமைக்கட்சியின் செனற்றர் சாரா ஹான்சன் யங் தெரிவித்தார்.
இந்த முகாமில் காவலாளிகளுக்கு முன்னால் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுமாறு சிறுவர்கள் வற்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நவுரு தடுப்பு முகாமிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பணியாளர்களிடம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாகவும், இது பற்றி தாம் நேரடியாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனிடம் கடந்த வாரம் முறையிட்டதாகவும் செனற்றர் சாரா ஹான்சன் கூறினார்.
இந்தத் தடுப்பு முகாமில் குளியல் வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நவுரு தீவில் தண்ணீர் விநியோகம் தடைப்படுவது இதற்குக் காரணம்.
இதே வேளை தடுப்பு முகாமில் சுமார் 12இற்கு மேற்பட்டோர் தற்கொலை முயற்சி அல்லது சுய தீங்கிளைத்தலில் ஈடுபட்டுள்ளனர். சிலர் தமது உதடுகளைப் பிணைத்துத் தைத்தும் உள்ளனர்.