ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததில் இருந்து இன்று வரை நடந்தவற்றை பார்ப்போம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜெயலலிதா பரப்பன அக்ரஹாராவில் உள்ள விவிஐபி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து பரப்பன அக்ரஹாரா பரபரப்பாகவே உள்ளது.
- தீர்ப்பை அறிவித்ததும் ஜெயலலிதாவுக்கு மயக்கம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
- ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனதுடன், எம்.எல்.ஏ. பதவியும் போனது.
- ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததும் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், அதிமுகவினர் ஆகியோர் கண்ணீர் விட்டனர். சிலர் தரையில் படுத்து அழுது புரண்டனர்.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அதிமுகவினர் பேருந்துகளை கல்வீசித் தாக்கினர், எரித்தனர், கடைகளை வலுக்கட்டாயமாக மூட வைத்தனர்.
- ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்த விவரம் அறிந்து அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
- சிறையில் அடைக்கப்பட்ட அன்று இரவு ஜெயலலிதா வெகுநேரம் தூங்காமல் சிந்தனையில் இருக்க, சிறைக்கு வெளியே ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கண்ணீரும், கம்பலையுமாக இரவை கழித்தனர்.
- ஜெயலலிதா சனிக்கிழமை இரவும், மறுநாள் காலையும் பன்னீர் செல்வம் அடையாறு ஆனந்த பவனில் இருந்து வாங்கி வந்த உணவை சாப்பிட்டார்.
- ஞாயிற்றுக்கிழமை காலை 3.30 மணிக்கே ஜெயலலிதா எழுந்துவிட்டார். தனது அறைக்குள் அங்கும் இங்குமாக சிறிது நேரம் நடந்துள்ளார்.
- காலையில் தமிழ், ஆங்கிலம் என 2 மொழி செய்தித்தாள்களை வாசித்துள்ளார்.
- ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்னையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
- திங்கட்கிழமை ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அழுதபடியே பதவியேற்றுக் கொண்டனர்.
- ஜெயலலிதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- திங்கட்கிழமை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
- செவ்வாய்க்கிழமை மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசு வழக்கறிஞர் யார் என்ற குழப்பத்தால் மனு மீதான விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
- கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.