Ad Widget

‘இந்தியாவுக்கு படகு ஏறிய எனது கணவனை காணவில்லை’

இந்தியா செல்வதற்காக மன்னார் ஊடாக படகு எறிய எனது கணவன் தொடர்பில் இதுவரையில் தகவல் இல்லை’ என காணாமற்போன செல்லத்துரை கருணாகரனின் மனைவி கஜேந்தினி சாட்சியமளித்தார்.

2(4014)

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்பாக ஸ்கந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை பூநகரி பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போதே மேற்படி பெண் இவ்வாறு சாட்சியமளித்தார்.

இங்கு தொடர்ந்து கூறிய அவர்,

‘எனது கணவர் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால போராளியாக இருந்து, பின்னர் விடுதலையாகி மன்னாரில் மரக்காலையொன்றை நடத்தி வந்தார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து 4 மாதங்கள் முகாமில் இருந்து, தொடர்ந்து எமது சொந்த இடமாகிய மன்னாருக்கு சென்றோம்.

இதன்போது, அச்சம் காரணமாக எனது கணவர் புனர்வாழ்வு முகாமுக்கு செல்லவில்லை. அத்துடன், அச்ச நிலைமை நீடித்ததை கருத்திற்கொண்டு இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை எனது கணவர் செய்தார்.

உறவினர் ஒருவரின் உதவியுடன் மன்னார் பேசாலையை சேர்ந்த முருகதாஸ் பூமணி என்பவர் ஊடாக இந்தியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து 1 இலட்சம் ரூபா பணமும் கட்டினார்.

தொடர்ந்து 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்தியா செல்வதற்கு படகு ஏறிய கணவர் தொடர்பில் இதுவரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் இந்தியாவுக்கு அனுப்பிய பெண்மணியிடம் வினாவியபோது, எனது கணவர் இந்தியாவிற்கு சென்றுவிட்டதாக கூறினார்.

தொடர்ந்து ஒரிரு மாதங்களில் இந்தியாவுக்கு அனுப்பிய பெண்மணி தலைமறைவாகினார்.

இன்று வரை எனது கணவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை’ என அப்பெண் மேலும் கூறியுள்ளார்.

எனது மகன் உயிருடன்தான் இருக்கிறான்

3(2993)

இதேவேளை, ‘ஷெல் வீச்சின் போது ஏற்பட்ட புகைமண்டலத்தில் காணாமற்போன எனது மகனை எனது மூன்று உறவினர்கள் மூன்று இடங்களில் கண்டுள்ளனர். ஆகையால் எனது மகன் இன்னமும் உயிருடன் இருப்பதை தான் நம்புவதாக காணாமற்போன ஸ்ரீரங்கன் மனோகரன் என்பவரின் தந்தை சாட்சியமளித்தார்.

தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,

‘நான் எனது குடும்பத்துடன் வட்டுவாகல் பகுதியினூடாக இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற வேளையில் ஷெல் ஒன்று வந்து எங்களுக்கு அருகில் வீழ்ந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் பெருமளவு புகைமூட்டம் எழுந்ததில் எனது குடும்பத்தினரை காணவில்லை.

தொடர்ந்து, நான் கதிர்காமம் முகாமில் தங்கவைக்கப்பட்டதுடன் ஒரு மகனை தவிர எனது மனைவி மற்றய பிள்ளைகள் இராமநாதபுரம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

எனது மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் எனது மகனை பதவியா வைத்தியசாலையில் கண்டதாக உறவினர் ஒருவர் எங்களுக்கு கூறினார்.

தொடர்ந்து, வலயம் 4 முகாமில் கால் இயலாதவர்கள் உபயோகிக்கும் நாற்காலியில் இருந்த நிலையில் எனது மகனை கண்டதாக மேலும் ஒரு உறவினர் கூறினார்.

நாங்கள் எங்கள் சொந்த ஊரான ஸ்கந்தபுரம் பகுதிக்கு வந்தோம். இதன்போது எமது மகனை வெலிக்கடை சி.ஆர்.ஆர்.ஆர். தடுப்பு முகாமில் கண்டதாக மேலும் ஒருவர் கூறினார்.

இதனையடுத்து, நாங்கள் அந்த தடுப்பு முகாமுக்கு சென்று விசாரித்த போது அப்படியொருவரும் அங்கு இல்லையென அவர்கள் பதிலளித்தார்கள்.

இதன்போது, ஆணைக்குழுவின் அதிகாரி, உங்கள் மகன் தற்போதும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றீர்களா? என கேட்டார்.

இதற்கு பதிலளித்த தந்தை எனது மகன் உயிருடன் இருப்பதை நிச்சயமாக நம்புகின்றேன் எனக்கூறினார்.

Related Posts