உயிரைப் பணயம் வைத்து சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்: மாவை

‘தீர்வு வழங்கப்படாவிட்டால் அடக்கு முறைக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து நாம் சாத்வீக போராட்டத்தில் குதிப்போம்’ என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

mavai mp

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளைக்கான புதிய நிர்வாகிகளுக்கு வரபேற்பளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு, துளசி மண்டபத்தில் சனிக்கிழமை(28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்தகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு வழங்காவிட்டால் எமது கட்சியின் மாநாட்டு பிரகடனத்தின் பிரகாரம் நாம் எமது சாத்வீகப் போராட்டத்தை தொடங்குவோம். இதற்காக தமிழ் மக்கள் அனைவரும் எமக்கு பின்னால் அணிதிரள வேண்டும்.

இந்த அரசாங்கம் மட்டுமல்ல, சிங்கள தலைவர்கள் அனைவருமே எம்மை ஏமாற்றி வந்துள்ளனர்.

ராஜபக்ஷ அரசாங்கம் தமிழத் தேசத்தை அழித்து வருவதுடன் தமிழ் பிரதேசங்களில் அராஜகத்தையும் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

முஸ்லிம்களின் மத அடையாளத்தையும் இனத்தின் பெயரால் அழித்து வருகின்றது. தமிழர்களின் காணி இன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எமக்கான தீர்வு வழங்காவிட்டால் நாம் சாத்வீக போராட்டத்தில் இறங்குவோம்.

இதற்காக முஸ்லிம்களின் ஒத்துழைப்பையும் மலையக மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் இந்த சாத்வீகப் போராட்டத்தை நடத்துவோம்.

தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் சிவில் அமைப்புகள் மலையக தமிழர்கள் ஒன்றிணைந்தால் சாத்வீக போராட்டம் வெற்றியடையும் இதற்கு நாம் தயாராக வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த மாகாணமாகவே எப்போதும் இருக்க வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால் எமக்கு 41 ஆசனங்கள் இருக்கின்றது.

சிங்களவர்களுக்குள்ள இறைமையும் நீதியும் தமிழ் பேசுகின்ற மக்களுக்கும் இருக்கின்றது. நீதியும் சமத்துவமும் பேனப்படல் வேண்டும். அந்த நீதிக்காக தமிழரசுக்கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் குரல் கொடுக்கும்.

இந்திய பிரதமரும் தமிழ் மக்களின் தற்போதைய நிலைபற்றி நன்றாக விளங்கிக்கொண்டுள்ளார். இது எமக்கு சாதகமாக அமையும்.
என்னைத்தலைவர் என்று சொன்னபோது எனக்கு கஸ்டமாக இருந்தது. எனது வரலாறு இரத்தம் தோய்ந்த வரலாறு. அன்று நான் இளைஞனாக இருந்த போது சாத்வீக போராட்டத்துக்காக ட்டக்களப்புக்கும் வந்துள்ளேன்.

அப்போது நான் கைதுசெய்யப்பட்டேன். மட்டக்களப்பு சிறைச்சாலையில் எந்தவித விசாரணையுமின்றி ஏழு எட்டு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டேன்.

தமிழ் மக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக சேர்ந்து இந்த அடக்கு முறைக்கு எதிராக அணி திரள்வதுடன் எமக்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts