மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை – முதலமைச்சர் சி.வி

மாசுபட்ட சூழலையும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் முற்றாகப் புரிந்து செயல்படாதிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சனிக்கிழமை (27) தெரிவித்தார்.

vicky

வடமாகாண சுற்றுலா துறை ஒன்றியம், வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில், ‘வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்’; என்னும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுற்றுலா என்பது கூரிய ஒரு கத்தியின் நுனியைப் போன்றது. முறையாகப் பாவித்தால் அது மக்களுக்குப் பலவித நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும். பிழையாகப் பாவித்தால் கொலைக்குக் கூட கருவியாகி விடும்.

சுற்றுலாவை உள்ளூர் மக்களின் நன்மைக்காகப் பாவிக்க வேண்டும். திட்டமிட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு, முகாமைப்படுத்தி நிலை பெறக் கூடிய வகையில் சுற்றுலா அபிவிருத்தி செய்யப்பட்டால் பல நன்மைகளை நாம் பெறலாம்.

நாங்கள் இருப்பது போரின் பின்னரான ஒரு சமூகத்திலேயே அன்றி பிணக்குகள் தீர்க்கப்பட்ட ஒரு சமூகத்தில் அல்ல. ஆகவே பிணக்குகளின் மூலகாரணங்கள் அறியப்பட்டு தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.

இராணுவம் கடற்படை ஆகியோர் வேளாண்மையில் மட்டுமன்றி மீன்பிடித்தொழிலிலும் உள்நுழைந்துள்ளனர். சுற்றுலா உணவகங்களையும் விளையாடும் திடல்களையும் கட்டி சுற்றுலாப் பயணிகளைத் தமது சிற்றுண்டிச் சாலைகளுக்கும் தங்குமிடங்களுக்கும் அழைக்கின்றனர்.

காங்கேசன்துறையிலும் காரைநகரிலும் கட்டப்பட்டுள்ளன விடுமுறை விடுதிகள் இவற்றிற்குச் சான்றாக விளங்குகின்றன.

மக்களுக்குரிய காணிகளைக் கையேற்றே மேற்படிக் கைங்கரியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களோ முகாம்களில் வாழவழியின்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரங்களை மாதம் தோறும் எவ்வாறு வழங்குவதென்று வடமாகாணசபை தனது தலையைச் சொறிந்து கொண்டு நிற்கின்றது.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கு நிலையான நன்மைகளைத் தரக்கூடிய சுற்றுலா அபிவிருத்தி உபாயங்களை உய்த்துணர்ந்து உபயோகிப்பது அவசியமாகின்றது. எமது பிரச்சனைகள் மற்றைய மாகாணங்களுக்குரிய பிரச்சனைகளில் இருந்து மாறுபட்டவை.

மத்திய அரசாங்கம் இதைப் புரிந்து கொள்ள முன்வர வேண்டும். சுற்றுலா உள்ளூர் மக்களுக்கும் அவர் தம் வாழ்விற்கும் அனுசரணையாக அமைய வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

சுற்றுலாவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்களும் உடன் சம்பந்தப்பட்டவர்களும் தமது உரிய ஊதியத்தைப் பெற வழிவகுக்க வேண்டும்.

இவ்வாறு நாம் செய்ய முன்வந்தால் நாம் சுற்றுலா சம்பந்தமான உலகளாவிய நன்நடத்தை முறைக் கோவையின் உள்ளடக்கங்களைப் புரிந்து நடந்து கொள்பவர்கள் ஆவோம்.

எமக்கென சுற்றுலாத் துறையை வளர்க்க ஒரு சுற்றுலாத்துறைசார் கல்விக்கூடம் அமைத்தல் அவசியமென்று கருதுகின்றேன். அது பற்றிய பூர்வாங்க கருத்துப் பரிமாற்றங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

யாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் வணிக பாடவிதானத்தில் சுற்றுலாவையும் உள்ளடக்கி எமது மாணவ சமுதாயத்தைச் சுற்றுலா அபிவிருத்திக்குத் தயார்ப்படுத்துவது அவசியம்.

எமது சுற்றுலாத் துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பற்றுக் கிடந்துள்ளது. இனியாவது நாம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

சுய நன்மைகளை மட்டும் சிந்திக்காது எம் மக்கள் மனதார வாழ்த்தும் விதத்தில் சுற்றுலாத்துறையின் பணிகள் அமைய வேண்டும் என்பதே எமது பேரவா! என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts