மஹிந்த குழம்பியுள்ளார் – சம்பந்தன்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கிறார் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

sambanthan-mahintha

இலங்கைத் தமிழரசுக் கட்சின் புதிய தலைவர் மாவை. சேனாதிராசா, மற்றும் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

இலங்கைத் தழிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாடில் அதன் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார சமூக கலாசார உரிமைகள் சம்மந்தமாக, மனித உரிமைகள் சம்மந்தமாக, மக்களுடைய பாதுகாப்பு சம்மந்தமாக சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இதனை எவரும் மறுக்க முடியாது.

எங்களுடைய கலாசாரம், பாரம்பரியம், மரபுகள் போன்றவற்றுக்கு மாறாக நிலமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவற்றை சர்வதேச சமூகம் மாற்றியமைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பாதையில் நாங்கள் முன்னேறுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

இதுபற்றி ஜனாதிபதி, சர்வதேசத்திடம் கூறியிருக்கின்றார். ஆனாலும் அதனுடைய விளத்தை அவர் கூறவில்லை.

ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை மீறியதன் காரணமாகத்தான், இலங்கை அரசுக்கு எதிரான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் நறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தெளிவு வரவேண்டியது அவசியம்.

ஐக்கிய நாடுகள் பிரேரணையின் அடிப்படையில், இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட பல விடயங்களிலிருந்து தற்போது அதிலிருந்து விலகி வேறு வழியில் முயற்சிக்கின்றார்கள் என கருதப்படுகின்றது.

சமீபகாலத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகையில், இந்த நாட்டில் சிறுபான்மையினம் என்று எவரும் இல்லை இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் ஒரே மக்கள் ஆனால், ஒரு வித்தியாசம்தான் இருக்கின்றது.

இந்த நாட்டை நேசிப்பவர்கள், நாட்டை நேசிக்காதவர்கள் என இரண்டு பிரிவினர்கள்தான் உள்ளார்கள். இந்த வேற்றுமையைத்தவிர வேறு வேற்றுமைகள் எதுவும் இங்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய- இலங்கை ஒப்பந்தில், இலங்கை நாட்டில் வெவ்வேறு மக்கள் வாழ்கின்றார்கள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தங்களது தனித்துவத்தைப் பேணுவதற்கும் உரிமையுண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் ஒவ்வாருவரும் அவர்கள் அனைவரும் அவர்களது தனித்துவத்தைப் பேணுவதற்கு உரிமையுண்டு அந்த அடிப்படையில் இந்த நாட்டில் ஆட்சி அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், சமீப காலமாக சிறுபான்மையினம் இந்த நாட்டில் இல்லை என கூறிய ஜனாதிபதி, இந்த நாட்டில் பெரும்பான்மையினம் இல்லை என்று சொல்லவில்லை.

இந்த நாட்டு ஜனாதிபதி, இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றார் இதில் எங்களுடைய விடயம் சம்மந்தமாகவும் பேசப்படும்.

அரசியல் தீர்வு காணாமல் வடக்கு, கிழக்கில் பெரிதளவில் இராணுவத்தினரைக் குடியேற்றி, பெரும்பான்மையினத்தவர்களைக் குடியேற்றி அவர்களுக்கு ஏற்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது.

ஆனால், தமிழ் மக்கள் புணர்வாழ்வு இல்லாமல். குடியிருக்க இடம் இல்லாமல் வாழவேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்சனைகளுக்குத் தீர்வு என்ற விடயம் இல்லாமல் போய்விடும்.

துரதிர்ஷ்டவசமாக நாங்கள் கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்ற வில்லை. இதனை நாங்கள் செய்திருக்கலாம் ஆனால் நாங்கள் செய்யத் தவறிவிட்டோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியரீதியில் பலம் பெற்றிருக்கின்றது. தற்போது முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எதிர் காலத்தில் முக்கிய தீர்வை நோக்கவுள்ளோம் எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறலாம்.

எமது மக்களின் போராட்டம் நியாயமான போராட்டம், இதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் இதனை அங்கிகரிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் முயற்சிக்கின்றது.

ஆனால், தீர்வு காணப்படாமல் அதை தொடர முடியாது என நாங்கள் நிரூபிக்க வேண்டும். எமது மக்கள் தமது சாத்வீகப் போராட்டத்தில் மூலமாக நிரூபிக்க வேண்டும். இவற்றை வருகின்ற தேர்தலில் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்தலாம் என்ற சிந்திக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் நடைபெறுகின்ற போது கட்சி ரீதியாகப் பலப்படுத்தப்படல் வேண்டும். எமது முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறு பலரது ஆதரவுகளையும் பெற்றுக்கொள்கின்றபோது சர்வதேசத்தின் ஆதரவும் பலமும் அதிகரிக்கும். ஆனால், தற்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழம்பிப் போயிருக்கின்றார் என அவர் தெரிவித்தார்.

Related Posts