மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
இதுவரை காமெடி படங்களில் அசத்தி வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக கொஞ்சம் சீரியஸ் கலந்த ரோலில், அதாவது போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையை சுமார் 6 கிலோ வரை கூட்டியுள்ளார். மேலும் உடலை பிட்டாக காட்ட ஜிம்மிற்கும் சென்று சில உடற்பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம், இன்னும் ஒருபாடல் மட்டுமே பாக்கி உள்ளதாம். இதனைத்தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார். முன்னதாக டாணா படத்தில், போலீஸ் உடையணிந்து நடித்தபோது, தனது அப்பாவை அடிக்கடி நினைவில் கொண்டு வந்து கண்கலங்கினாராம் சிவகார்த்திகேயன்.