உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண சபைக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு மாகாண சபை செயற்படத் தொடங்கிய பின்னர் முதல்தடவையாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் ஆரம்பித்துவைத்தார்.
யாழ்ப்பாணத்தின் கைதடி மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட முற்றாக கண் பார்வை இழந்த பயனாளி கந்தையா வரதராசன் என்பவரின் காணியில் அடிக்கல் நாட்டி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன், முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொணடனர்.
வீடமைப்புத் திட்டத்திற்கான நிதியாக கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூபா மூன்று மில்லியன் ஒதுக்கப்பட்டு வந்தது. 2 014 ஆம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபாவில் முதலமைச்சரின் நல்லெண்ணத்தில் தோன்றிய “வறிய மக்களுக்கு புதிய வீடு” என்ற திட்டம் முதல் தடவையாக இவ்வருடம் கைதடியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கான பயனாளிகள் வடக்கு மாகாண சபை முதலமைச்சரிடம் வீடு கட்டுவதற்கு உதவி கோரிய போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பொதுமக்களிலிருந்து பொருத்தமான பயனாளிகள் சரியாக இனங்காணப்பட்டு ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதில் ஒரு பயனாளிக்கு ஆறு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டவுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் கூடுதலாக நிதி கிடைக்கப்பெற்றால் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இன்னும் வீட்டு வசதி இல்லாத வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.