இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை சமர்ப்பிக்கும் போது சுட்டிக்காட்ட உள்ள விடயங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த கால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பூரண விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழு மேற்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முக்கியமான பங்களிப்பினை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்தும் தரப்பினருடன் இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், இது இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட உள்ள வாய்மொழி மூல அறிக்கையின் எழுத்து மூல பிரதியில் அல் ஹூசெய்ன் குறிப்பிடப்பட்டுள்ளார்.