தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராடவேண்டிய தருணம் – சத்தியலிங்கம்

அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ்மொழி பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து போராட வேண்டிய தருணம் இதுவென வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கியும்
ஆண்டியாபுளியங்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் நேற்று திங்கட்கிழமை (22) வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘இந்நாட்டில் வாழ்கின்ற தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மதத்ததால் வேறுபட்டாலும், மொழியால் ஒன்றுபட்டவர்கள். இந்நிலையில், எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக எதிர்காலத்தில் தமிழ்மொழி பேசும் மக்களுக்கான தீர்வை நோக்கி இணைந்து போராட வேண்டிய தருணம் இது.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுக்கென தனித்துவமான மொழி, கலாசார விழுமியங்களை கொண்டு வாழ்கின்ற தேசிய இனங்கள்.

சனத்தொகையில் சிங்களமொழி பேசுபவர்களை விட, தமிழ்மொழி பேசுபவர்கள் குறைந்தவர்களாக இருப்பதால் நாமொன்றும் அவர்களுக்கு குறைந்தவர்களல்ல. அவர்கள் அனுபவிக்கும் அனைத்து அரசியல் உரிமைகளையும் நாமும் அனுபவிப்பதற்கு உரித்துடையவர்கள். ஆனாலும், தமிழ்மொழி பேசும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அண்மைய நடவடிக்கைகள் இந்நாட்டில் நாம் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுவதை கோடிட்டுக்காட்டுகின்றது.

எனவே, மொழியால் ஒன்றுபட்டு வாழ்கின்ற, தேசத்தால் அடக்கி ஆளப்படுகின்ற சிறுபான்மை இனங்களாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது.’ என்றார்.

Related Posts