அழிவாயுதங்கள் நடத்திய அவலங்களை படிப்பினையாகக் கொண்டு இனி அறிவாயுதத்தை இளைஞர்கள் ஏந்த வரவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ். விந்தன் இன்று(20) தெரிவித்துள்ளார்.
கொக்குவில் பொற்பதியில் நடைபெற்ற நல்லூர்த் தொகுதியின் இளைஞர் அணி அங்குரார்ப்பணக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாயமான்களைப் பின் தொடர்ந்து ஓடி, எமது மக்கள் அம்புபட்டு அழிந்த அவலங்கள் இனியும் வேண்டாம். அறிவாயுதத்தை ஏந்துவோர் வழிநடத்தும் பாதையில் எமது மக்களை அழைத்துச் செல்ல இளைஞர்கள் விழித்தெழுந்து வரவேண்டும்.
உலக உருண்டை எங்கும் நடந்து முடிந்த உரிமைப் போராட்டங்கள் யாவும் வெற்றிபெற்றிருக்கின்றன. தீர்வைத்தந்திருக்கின்றன.
ஆனாலும் எமது மக்களின் உரிமைப்போராட்டம் மட்டும் இத்தனை அவலங்களுக்குப் பின்னரும் தீர்வின்றிச் செல்வதற்கு யார் காரணம்? அரசியல் தீர்வுக்கு அடுத்தவர்களே தடையென்று சுட்டுவிரலை நீட்டும்பொழுது ஏனைய நான்கு விரல்களும் அவர்களை நோக்கியே நீள்கின்றன.
வடமாகாண சபையின் அதிகாரங்களை பெற்றுக் கொண்ட பின்னரும் அதை நடைமுறைப்படுத்த அரசாங்கமே தடை என்று நொண்டிச்சாட்டுக் கூறிவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அரசியல் தீர்வுக்கு தடையானவர்கள் அடுத்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து கொள்ள இது ஒன்றே போதும்.
தாம் உல்லாசமாக ஓடித்திரியும் ஏசி பூட்டிய ஆடம்பர வாகனங்களை பெறுவதற்கு அரசாங்கம் தடையில்லையென்றால் வடமாகாண சபையை இயக்குவதற்கு அரசாங்கம் எவ்வாறு தடையாக இருக்க முடியும்? எந்த ஆளுநர் வடமாகாண சபையை இயக்கத் தடையாக இருக்கின்றார் என்று கூறுகின்றார்களோ அதே ஆளுநரிடமிருந்து தான் சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.
உங்களது சொந்தச் சலுகைகளை மட்டும் அரசிடம் இருந்து பல்லிழித்துப் பெறமுடியும் என்றால் தமிழ் மக்களுக்கான வடமாகாண சபையை அரசுடன் இணைந்து ஏன் இயக்க முடியாமல் இருக்கின்றது? பாவம் மக்கள்.
உங்கள் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களித்தவர்கள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றார்கள். வாக்குகளைச் சுருட்டிய நீங்கள் அடுத்த தேர்தலின் நாற்காலிகள் மீது கண்வைத்து காரியமாற்றுகிறீர்கள்.
வெற்று வீரப் பேச்சுக்கள் இலட்சிய வெற்றிகளுக்கு துணைவராது வெற்றறிக்கைகள் எதையும் பெற்றுத்தராது. இதை மக்களுக்கு உணர்த்த இளைஞர்கள் மாபெரும் சக்தியாகத்திரண்டு எழுந்துவரவேண்டும்.
மக்களை வழிநடத்தும் மகத்தான சக்தி இளைஞர் சக்திதான். ஒருகுரல் ஓசை எழுப்பாது. ஒருமித்த குரல்களே எல்லாச் செவிகளிலும் எட்டும். மாற்றங்களையும் இந்த மண்ணில் உருவாக்கும்.
இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் ரவீந்திரதாசன், மகேஸ்வரி நிதியத்தின் இணைப்பாளர் றஜீவ் கல்விச் சமூகத்தினர் மற்றும் இளைஞர்கள் எனப் பலர்; கலந்து கொண்டனர்.