மைன் ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் வழக்கு

இந்தியில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

linga-rajini

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், விரைவில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் என்ற படத்தில், பல படங்களில் தான் உருவாக்கிய சூப்பர் ஹீரோ இமேஜை, இந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பதாகவும், இந்தப் படத்தில் சில முறையற்ற காட்சிகள் இருப்பதாகத் தான் அறிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய அனுமதியைப் பெறாமல் தன் பெயரையோ, தான் வசம் பேசும் முறையையோ பயன்படுத்துவது தனக்கு இருக்கும் உரிமையை மீறும் செயலாகும் என்றும் அந்த ரஜினி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பான எந்த ஒரு படத்திற்கும் இதுவரை தான் அனுமதி அளித்ததில்லை என்றும் ரஜினிகாந்த் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படத்திற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி தமிழ்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்த்து. இந்தப் படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்த நீதிபதி, படத் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனருக்கும் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்தியில் வர்ஷா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்தில் ஃபைசல் சயீஃப் என்பவர் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில், ஆதித்ய மேன்ன், கவிதா ராதேஷ்யாம் ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர்.

Related Posts