இந்தியா அழகான நாடு, ஷங்கர் போன்ற இயக்குநர்களின் இயக்கத்திலும், இந்திய படங்களிலும் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று ஐ படத்தின் ஆடியோ விழாவில் பேசினார் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், விக்ரமின் மாறுபட்ட மற்றும் மிரட்டும் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஐ. விக்ரம் ஜோடியாக மதராசப்பட்டினம் ஹீரோயின் எமி ஜாக்சன் நடித்துள்ளார். இவர்கள் தவிர்த்து மறைந்த நடிகர் சிவாஜின் மூத்த மகன் ராம்குமார், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்த இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் தோற்றத்தை பார்த்து அனைவரும் மிரட்டும் போய் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவில் ஐ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது.
ஐ படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ஐ படத்தின் பாடல்கள் பாடி அசத்தினர்.
நிகழ்ச்சியின் போது, ஐ படத்தில் இடம்பெற்றுள்ள என்னோடு நீயிருந்தால்… பாடலுக்கு விக்ரமும், எமி ஜாக்சனும் நடனம் ஆடினர். இந்தப்பாடலுக்கு விக்ரம் ஓநாய் மனிதன் போன்ற தோற்றத்தில் வந்தார்.
நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அர்னால்டுக்கு பிடித்த பாடி பில்டிங் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற கலைஞர்கள் தங்களது அழகிய உடற்கட்டை காண்பித்தனர். இதனை அர்னால்டு மிகவும் ரசித்து பார்த்தார்.
இந்திய படங்களில் நடிக்க ஆசை – அர்னால்டு
இந்தியா ஒரு அழகான நாடு, முதன்முறையாக நான் சென்னை வந்துள்ளேன். ஆஸ்கர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி.
இந்தியாவில் நல்ல நல்ல படங்கள் நிறைய வருகின்றன. ஐ போன்ற படங்களை பார்க்கும் போது எனக்கும் இந்திய படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது, குறிப்பாக ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. சென்னை மக்களின் அன்பு பிடித்து இருக்கிறது, நான் மீண்டும் சென்னைக்கு வருவேன் என்று பேசினார்.
விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார், லட்சுமி ராய், சிபிராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், விஜய் அமலாபால், லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஐ படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே மேற்சொன்ன வார்த்தைகளை பேசிவிட்டு கிளம்பிவிட்டார் அர்னால்டு. இதனால் ஐ படத்தின் இசை தட்டை கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் வெளியிட ரஜினி பெற்றுக்கொண்டார். இவர்களோடு ரஹ்மான், பாடலாசிரியர்கள், கபிலன், மதன்கார்கி, ஷங்கர் உள்ளிட்ட ஐ படத்தின்குழுவினர் பங்கேற்றனர்.
பாதியில் வெளியேறிய அர்னால்டு – அர்னால்ட்டை வீணடித்த படக்குழு
ஐ படத்தின் விழாவுக்கு, எதற்காக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு அழைக்கப்பட்டாரோ அதை படக்குழுவினர் வீணடித்துவிட்டனர். சுமார் 6 மணிக்கு துவங்க வேண்டிய நிகழ்ச்சி 8 மணிக்கு தான் துவங்கியது. மேலும் நிகழ்ச்சிக்கான நிரலும் சரிவர அமைக்கப்படாததால் படத்தின் ஆடியோ சிடியை வெளியிடுவதற்கு முன்பாகவே அர்னால்டு கிளம்பிவிட்டார்.