சீன ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் 21 ஆம் நூற்றாண்டின் புதிய கடலோர ‘சில்க் பாதை’ திட்டத்தை பாராட்டியுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்திட்டம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.
சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்க்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள ஜனாதிபதி இலங்கை சீனாவின் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது;
கடந்த 28 வருட காலப்பகுதியில் சீனா ஜனாதிபதி ஒருவர் முதல்தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்,இரு தரப்பு உறவுகளுக்கு இது முக்கியமான விடயம்,
வரலாற்று ரீதியாகவே இரு நாடுகளுக்குமிடையில் நல்லுறவு காணப்படுகின்றது . கடந்த மே மாதத்தில் இரு நாடுகளும் தங்களுடைய உறவுகளை மேலும் தரமுயர்த்தியதை தொடர்ந்து நட்புறவு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்துள்ளது.
ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர் ஏழு தடவைகள் சீனாவிற்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளேன். இதன் போது பல தடவைகள் சீனா ஜனாதிபதியை நான் சந்தித்துள்ளேன்
சீனாவுடன் வர்த்தகத்தையும் முதலீட்டையும் அதிகரிக்க இலங்கை விரும்புகின்றது.
2009 இல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர்,இரு நாடுகளும் புனர்நிர்மானம் மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைத்துள்ளன.
இலங்கைக்கு வரும் சீன உல்லாசப் பிரயாணிகளை இலங்கை வரவேற்கின்றது. இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் 82,000 சீன உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வந்துள்ளனர்.
இவ்வருடத்தில் மொத்தம் ஒரு லட்சம் சீன உல்லாசப் பிரயாணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.