நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை – ஜனாதிபதி

பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம். ஆனால் எமது நாட்டில் அது முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நாம் போராடினோம். நாம் தமிழர்களுக்கு எதிராகப் போராடவில்லை. இனி எந்தக் காலத்திலும் எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை பிரிப்பதற்கு சந்தர்ப்பத்தினை வழங்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

mahintha

பண்டாரவளை நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலைய அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

முப்பது வருட யுத்தம் இந்த நாட்டில் இருந்ததை இன்று பலர் மறந்துவிட்டார்கள். அந்தளவுக்கு சுதந்திரக் காற்றை இந்நாட்டு மக்கள் சுவாசிக்கிறார்கள். இன்று நாங்கள் அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தொழில்நுட்ப உலகுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் எமது சந்ததியினரை தயார்படுத்தும் சீரிய எண்ணத்துடன் நாம் செயற்பட்டு வருகிறோம்.

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தியை பலர் புதுமையாக பார்க்கின்றனர். எல்லா இடமும் காபட் போடப்படுகிறது. அதனை மக்களால் சாப்பிட முடியுமா என்று கிண்டலாக கேட்கின்றனர். எனினும் மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? இளையோர் என்னிடம் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? அவர்கள் கிராமங்களுக்குச் செல்ல காபட் பாதை கேட்கிறார்கள்.

நாட்டில் இன்று 96 வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் மிகுதி நான்கு வீதமானோருக்கும் மின்சாரம் வழங்குவோம் என்பதை இந்நேரத்தில் உறுதியாக தெரிவிக்கிறேன்.

அதேபோல இலங்கையர்கள் அனைவருக்கும் குழாய் நீர் பெற்றுக்கொடுப்பதே எனது அடுத்த இலக்காகும். அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

நான் பொய் சொல்ல மாட்டேன். சொல்வதைச் செய்வேன். இலங்கையில் 20 மில்லியன் மக்கள் சனத்தொகையாகும். ஆனால் தொலைபேசிகளின் எண்ணிக்கை 27 மில்லியன் என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. அவ்வாறெனின் நாம் புதிய தொழில்நுட்பத்தில், அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

நாம் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த வறிய வாழ்க்கை தற்போது மாறி வருகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்று மனித உரிமையைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள் அன்று என்ன செய்தார்கள் என்பதை நினைத்துப்பாருங்கள். கிராமத்தில் 14 வயதான சிறுவர்கள், அந்த வயதை ஒத்த இளைஞர்களை துன்புறுத்தினார்கள். அதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

நான் பௌத்தன் என்று சொல்வதற்கு பயப்பட மாட்டேன். சிங்களவன் என்று சொல்வதற்கும் பயப்படமாட்டேன். ஆனால் பலருக்கு அப்படிச் சொல்வதற்குப் பயம் இருக்கிறது. நாம் பௌத்தர்கள்தான். ஆனால் ஏனைய மதத்தை மதிக்கும் பௌத்தர்கள்.

நான் ஜனாதிபதியாக ஆவதற்கு முன்னர் சிலருடைய பிரச்சாரம் எப்படியிருந்தது தெரியுமா? அதாவது நான் ஆட்சிக்கு வந்தால் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி ஒலிக்க விடமாட்டேன், மத சுதந்திரம் இருக்காது என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் இன்று நாட்டில் எந்தளவுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.

இந்த நாடு ஜனநாயக நாடு இல்லை என வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் ஏகாதிபத்திய ஆட்சி செய்வதாக குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நான் ஏகாதிபத்தியவாதியாக நடந்துகொள்வதில்லை. என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்காக எனது ஆட்சியை நான் பயன்படுத்துவது கிடையாது.

அமைச்சரவை இருக்கிறது, பாராளுமன்றம் என்ற ஒன்று இருக்கிறது. அங்கு பேசப்படும், ஆராயப்படும் விடயங்களையே நான் செயற்படுத்துகிறேன்.

பயங்கரவாதம் உலகை எந்தளவுக்கு ஆட்டிப்படைத்து வருகிறது என்பதை இன்று நாம் நன்கு அறிவோம் என்றார்.

Related Posts