பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட குழுவான கோப்ரா குழுவினருடன் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்திய பின்னர் கருத்து வெளியிட்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன், டேவிட் ஹெய்ன்ஸை ஒரு பிரிட்டிஷ் நாயகன் என்று குறிப்பிட்டார்.
இன்னொரு பிரிட்டிஷ் பிரஜையால் இப்படியான ஒரு ஈனச் செயலை செய்ய முடிந்திருப்பது கண்டு நாடே அருவருப்பு அடைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் “முஸ்லிம்கள் அல்ல அரக்கர்கள்” என கெமரன் குறிப்பிட்டார்.
ஹெய்ன்ஸ் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சனிக்கிழமை பின்னிரவில் வெளியாகியிருந்தது.
கொல்லப்பட்டுள்ள டேவிட் ஹெய்ன்ஸின் குடும்பத்தினர், அவருடைய மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இனம், மதம் எல்லாம் பார்க்காமல் உற்சாகத்துடன் மனிதர்களுக்கு உதவுவதையே வாழ்க்கையின் தத்துவமாகக் கொண்டவர் டேவிட் ஹெய்ன்ஸ் என அவரது சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய அரசு அமைப்பினர் செய்யும் இப்படியான கொலைகள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணான காட்டுமிராண்டித்தனம் என பிரிட்டனின் இஸ்லாமிய சமூகம் என்ற அமைப்பின் தலைவர் சுக்ரா அகமது தெரிவித்துள்ளார்.