பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களை விமர்சித்திருக்கின்றமை எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நாட்டில் ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ் சட்டம், ஒழுங்கு சம்பந்தமான அதிகாரங்களைக் கேட்கின்றோமே தவிர ஒரு படையணிக்கான அதிகாரங்களை கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராசாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று அக்கட்சியின் ஏற்பாட்டில் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்றபோது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் பற்றிச் சில விமர்சனங்களை கூறியுள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் இது கவனிக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளராகக் கடமையாற்றுபவர் பல அரசியல் கருத்துக்களைச் சொல்லியிருப்பது எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறிய கருத்தக்கள் அரசியற் கருத்துக்களாக இருப்பதால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதுடன் அதுவொரு பொதுச் சேவகன் செய்யக் கூடாத செயலாகவும் அமைந்துள்ளது.
இந்தக் கூற்றுக்களிலேயே அவர் தனக்கு எவ்வளவு விடயங்கள் தெரியும் என்பதை எடுத்துக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் அதிகூடிய அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வுகிடைக்க வேண்டும் என அவர் சொல்லியிருப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைப்பதாகவே உள்ளது. இந்த அதிகூடிய அதிகாரம் என்ற சொற்பதத்தை இந்த நாட்டில் உபயோகித்துள்ளது அவருடைய சகோதரர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஆவார். அவர் கூறிய விடயத்தையே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் 11ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ஒரு நிபுணர் குழுவை அமைத்து அங்கு உரையாற்றுகையில் அவர் பாவித்த சொற்பதமே அதிகூடிய அதிகார பகிர்வின் மூலமாக இந்த நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதாக அமைகிறது.
இந்த வகையில் பாதுகாப்புச் செயலாளர் தன்னுடைய சகோதரரின் கூற்றுக்கு எதிராகவே இக்கருத்தை கூறுகின்றார். ஏனெனில் ஜனாதிபதியே இந்நாட்டைப் பிரிக்கப் போகின்றார் என்றே பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார். இச்சொல்லை ஜனாதிபதியே முதலில் உபயோகித்தள்ளார். அடுத்ததாக அதிகாரப் பகிர்வு என்றால் என்ன எனத் தெரியாத நிலையிலும் அவர் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். பிரிக்கப்படாத ஒற்றுமையான நாட்டுக்குள்ளே அதிகாரப் பகிர்வு என நாங்கள் சொல்லிக்கின்ற போது அதனைப் பிரிவினைக்கு இட்டுச் செல்கின்றது என்று சொல்வது வேண்டுமென்றே தமிழ் மக்கள் மீதும் தமிழ் மக்களுடைய அரசியல் கட்சியின் மீதும் காட்புணர்வை சிங்கள மக்கள் மத்தியில் தூண்டுவதாக அமைகின்றது. அவர் செய்திருக்கின்ற விடயத்தால் நாட்டின் சுமூக நிலையை பாதிக்கக் கூடிய வகையில் யாராவது ஏதாவது செய்திருந்தால் அது பாதுகாப்பு செயலாளரின் கூற்றாகவே அமையும்.
நாங்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான அதிகாரங்களை கேட்கின்றோமே தவிர ஒரு படையணிக்கான அதிகாரங்களை கேட்கவில்லை. இதனையே சம்பந்தன் ஐயாவும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விடயத்தை எங்களுடைய தீர்மானத்திற்கு பின்பே ஜனாதிபதியும் இந்துப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவோம் அப்பாலும் செல்லுவோம் என்று சொன்னபோது அதற்கான முதற்படியான 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதிலே சட்டம் ஒழுங்கு அதிகாரம் மாகாண சபைக்கும் வழங்கப்படுகிறது.
ஆகவே இப்படியான வங்குரோத்தை கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம் பாதுகாப்புச் செயலாளருமே இவ்விடயத்திற்குப் பதில் கூற வேண்டும் என்றார்.