யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையில் 22 பஸ்களுக்கு மட்டும் அனுமதியிருப்பதாகவும் மிகுதி பஸ்கள் இந்த வழிதடத்தில் சேவையில் ஈடுபடமுடியாது என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன நேற்று வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார்.
யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் – கொழும்பு வழித்தட சேவையில் ஈடுபடும் பஸ்களை ஏ – 9 வீதியில் கடமையில் ஈடுபடும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர். அத்துடன் கைதடி மற்றும் மிருசுவில் பகுதிகளில் அனுமதிப்பத்திர சோதனைகள் விசேடமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழித்தட அனுமதியில்லாத எந்த பஸ்ஸூம் சேவையில் ஈடுபடமுடியாது. அத்துடன், வழித்தட சேவையிலுள்ள பஸ்களின் இலக்கங்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக விரைவில் அறிவிக்கவுள்ளோம்.
இதன்மூலம் வழித்தட அனுமதியில்லாத பஸ்களில் பயணங்களை மேற்கொண்டு எதிர்கொள்ளும் தேவையில்லாத சிரமங்களை பொதுமக்கள் தவிர்த்து கொள்ள முடியும்.
வழித்தட அனுமதியில்லாத பஸ் ஒன்று பயண பாதையை மாற்றி, புத்தூர் வீதி வழியாக சென்று கடந்த வாரம் விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 20 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தமை அனைவரும் அறிந்தவொரு விடயம்.
ஆகவே இது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
மேலும், வழித்தடங்கல் அனுமதியுள்ள 4 பஸ்கள் மீது இனந்தெரியாத நபர்களால் கடந்த வாரம் கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.