Ad Widget

தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

DSC07905

வடமாகாண வர்த்தக வாணிப உள்ளூராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் முழங்காவில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் அனுசரணையின் கீழ் முழங்காவில் கிருஷ்ணா நகரில் அமைக்கப்பட்டவுள்ள கோழிக்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கான அடிக்கல்லை நேற்று வியாழக்கிழமை (11) நாட்டி உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

இராணுவம் வட, கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருபத்து ஐந்து வருடங்களுக்கேனும் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த காலகட்டத்தில் சிங்களவரை பெருவாரியாக கொண்டுவந்து இங்கு குடியிருத்தி, இந்நாட்டில் பறங்கியர் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்று நாம் எவ்வாறு இப்பொழுது கூறுகின்றோமோ, அதேபோல் இங்கு தமிழ் பேசும் மக்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று கூறக்கூடிய ஒரு காலகட்டத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனக்குக் கிடைத்த தகவலின் படி 2008ஆம் ஆண்டிலேயே அரசாங்கம் சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் ‘போர் விரைவில் முடிந்து விடும். ஆனால் எமது இராணுவம் குறைந்தது 25 வருடங்களாவது வட, கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களை தலையெடுக்கவிடாமல் பண்ண வேண்டும்’ என்று கூறியுள்ளாராம்.

அவரின் குறிப்பிட்ட கூற்றுக்கு ஏற்பவே நடவடிக்கைகள் நடந்து வருவதாக தென்படுகிறது. அவர்களுக்கு ஒன்று மட்டும் கூற விரும்புகிறேன். 1988ஆம் ஆண்டில் ஒரு இந்திய இராணுவ உயரதிகாரி என் நண்பர் ஒருவருக்கு கூறினாராம் ‘நாங்கள் இலங்கைக்கு வந்து விட்டோம். இனி 100 வருடங்களுக்கு இலங்கையை விட்டுப் போகமாட்டோம்’ என்று.

ஆனால் அடுத்த வருடமே இந்தியாவின் பிரதமராக வீ.பீ.சிங் வந்தவுடன், இந்திய இராணுவம் வாபஸ் பெறப்பட்டது. இதனை Man proposes God disposes என்பார்கள். அதாவது, மனிதன் முன்மொழிவான் இறைவன் முடித்து வைப்பான் என்பதின் அர்த்தத்தை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இறை நம்பிக்கை கொண்டவர்கள் வட, கிழக்கு மாகாணத்தவர்கள். இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ, இந்துக்களோ இறை நம்பிக்கையில் வாழ்பவர்கள். முடித்து வைப்பவன் இறைவன் என்பதில் சந்தேகமில்லாதவர்களே எம்மக்கள்.

ஈ.பி.டி.பி.யும் இராணுவத்தினரும் மக்களை அச்சுறுத்துகின்றனர்

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்; தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு பின்னடைந்துள்ள கிராமங்களுக்கு மக்கள் சார்பான திட்டங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்து எங்கே எம்மக்கள் விடுபட்டுப் போய் விடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் எமது நிகழ்ச்சிகளுக்கு வராது தடுக்க பிரயத்தனங்களில் இராணுவமும் அதனைச் சார்ந்தோரும் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், எம்மக்களை எமது நிகழ்வுகளுக்கு வராது தடுக்க மக்களை அச்சுறுத்தி வருவதாக கேள்விப்படுகின்றேன். இதில் இராணுவத்தினர் மட்டுமன்றி ஈ.பி.டி.பி ஒட்டுகுழுவும் ஈடுபட்டுள்ளதை இணையத்தளம் ஊடாக இன்று காலை அறிந்து கொண்டேன்.

இராணுவத்தில் இருந்து சிலர் இங்கு வந்து படமெடுத்து கொண்டிருப்பதாக அறிகிறேன். ஏன் என்று எனக்கு புரியவில்லை. எமது பாதுகாப்புக்கா அல்லது மக்களை அச்சுறுத்துவதற்கா படம் எடுக்கின்றீர்கள்?. பாதுகாப்பென்றால் எங்கள் மக்களுக்கு தேவையான ஒரேயொரு பாதுகாப்பு இராணுவத்தினரிடம் இருந்து தான்.

நாங்கள் இராணுவத்தினரை எங்களை பாதுகாருங்கள் என்று கூறவில்லை. இராணுவம் இங்கு இருப்பதால் எம்மக்கள் தான் பாதுகாப்பின்றி பயத்திற்கு ஆளாகின்றார்கள். படம் எடுப்போர் அவ்வாறு செய்வதை உடனே நிறுத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் இளைஞர் யுவதிகளை கொண்டு உங்களின் படங்களை நாம் எடுத்து தெற்கிலே பத்திரிகைகளில் விளம்பரம் செய்வோம். இவ்வாறு தான் இராணுவம் இங்கு படம் எடுக்கின்றார்கள் என்று சொல்லி வைப்போம்.

இதேபோல் தான், கடந்த 7ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மகாநாட்டிற்கு கனகராயன் குளம், நெடுங்கேணி, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் இருந்து வர எத்தணித்த எம்மக்கள் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தொட்டிலையும் ஆட்டிவிட்டு குழந்தையையும் கிள்ளிவிடும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஒரு புறம் எம்முள் இணக்கம் வேண்டும், நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஊரறிய, உலகறிய, வாய் வழியாக அரசாங்கத்தவர்கள் கத்துகின்றார்கள். மறுபுறம் இராணுவ கட்டுப்பாட்டை கூட்டி மக்களை அச்சுறுத்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளை அவர்கள் பிரயோகிப்பதைத் தடுக்க முயல்கின்றார்கள்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்

எமது தமிழ்ப் பேசும் மக்கள் தமது மத ரீதியான வேற்றுமைகளை மறந்து ஒருமித்து செயலாற்ற முன்வர வேண்டும். ஒன்றை நான் இந்த சந்தர்ப்பத்தில் கூறிவைக்கிறேன். மலையகத்தில் இருந்து வந்து, வன்னியில் குடியேறி இருக்கும் தமிழ் மக்கள், எமது சகோதர சகோதரிகள்.

அவர்களை இங்கு வாழ்ந்து வந்த சிலர் வேற்று மக்களாக பார்க்கின்றார்கள் என்றும் எமது அலுவலர்கள் சிலர் அவர்களைப் பாரபட்சத்துடன் நடத்த எத்தணிப்பதாகவும் எமக்கு புகார்கள் கிடைத்துள்ளன.

இது நிறுத்தப்பட வேண்டும். எம்முள் வேற்றுமைகளை நாம் விரிவடையச் செய்தால் 25 வருடமல்ல 50 வருடங்களுக்கும் இராணுவத்தை வட, கிழக்கு மாகாணங்களில் இருந்து திருப்பி அனுப்ப முடியாது.

எம்மக்களிடையே கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தி, பாகுபாட்டை ஏற்படுத்தி மக்கள் ஒன்று சேராமல் தடுக்க சதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனை நாம் எமது ஒற்றுமையால் முறியடிக்க வேண்டும்.

அதற்கேற்றவாறுதான் மக்களுக்குப் பயன்தரும் வேலைத்திட்டங்களை, மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் வேலைத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எந்தவித பாகுபாடுமின்றி இப்பேர்ப்பட்ட வேலைத்திட்டங்களில் எமது தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஐக்கியப்படுத்தப்படுவார்கள். எல்லாவித தடைகளையும் நாம் தகர்த்தெறிந்து முன்னேறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது.

அரசியலுக்கு குழந்தைகள் வேண்டாம்

எங்களை இந்நிகழ்வுக்கு வரவேற்று அழைத்து வந்த பாண்டு வாத்தியக் குழுவைச் சேர்ந்த அந்த குழந்தைகளுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. காலையில் இருந்து அவர்கள் இங்கு காத்து நின்றதாக அறிந்தேன். மனம் வேதனை அடைகின்றேன். கல்லூரிகளில், பாடசாலைகளில் நடைபெறும் உள் நிகழ்ச்சிகளில் இக்குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.

ஆனால் வெளியில் நடைபெறும் விழாக்களுக்கு அதுவும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அவர்களை கூட்டி வருவது சரியென எனக்குப் படவில்லை. இந்தப் பழக்கத்தை நாங்கள் அடியோடு நிறுத்த வேண்டும். மேலும் இன்று படிக்க வேண்டிய நாள். அவர்களின் முழுநாளைய படிப்பு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts