இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள முப்படையினரின் 20 பயிற்சி நிலையங்கள் ஊடாக கட்டங்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும்நகர அபிவிருத்தி அமைச்சு ஊடக அமையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கொள்ளுப்பிட்டி யிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது;
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி வழங்கும் உயர் கல்வி அமைச்சின் புதிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் நான்காம் கட்ட பயிற்சிகள் கன்னொறுவயிலுள்ள இராணுவத்தின் இயந்திரவியல் மற்றும் பொறியியல் பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இம் மாதம் 8 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை 7500 பேருக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் இரண்டாவது கட்டமாக ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 8000 பேருக்கும் மூன்றாவது கட்டமாக ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை 8000 பேருக்கும் கட்டம் கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கவென முப்படைகளின் 20 பயிற்சி நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இராணுவத்தின் 16 நிலையங்களும். கடற்படையின் 3 நிலையங்களும் விமானப் படையின் ஒரு நிலையமும் அடங்கும். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.