வட மாகாண சபையை பணிச்சபையாக மாற்ற நினைத்தவர் டக்ளஸ் – குணசிறி

வட மாகாண சபையை மக்கள் பணிச்சபையாக மாற்ற வேண்டும் என்ற கனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இருந்தது. ஆனால், அதில் இன்று மக்களாகிய நாம்தான் தோற்றுப் போயுள்ளோம். அமைச்சர் சார்ந்த கட்சி தோற்றுப் போகவில்லையென சங்கானை பட்டின அபிவிருத்திச் சபையின் செயலாளர் குணசிறி தெரிவித்துள்ளார்.

Kunasri

சங்கானை, நிச்சாமம், சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 58ஆவது வருடப் பூர்த்தி விழா சனசமூக நிலைய வளாகத்தில், அதன்தலைவர் திரு.பிரதீப் தலைமையில் நேற்று (06) நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய குணசிறி,

இங்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்டு மிகவும் அமைதியாக, பொறுமையுடன் இருந்து நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்கிறார்.

இதற்கு ஒரு காரணம் உண்டு இப்பகுதி முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை அதிகமாகவே கொண்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால போராளியாக இருந்து செயற்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முற்போக்கு சிந்தனையுடையவர்.

அக்காலந்தொட்டே அவருக்கு இப்பகுதி வாழ் முற்போக்கு சிந்தனையாளர்களுடனான நெருக்கமான தொடர்புகள் இருந்துள்ளன.

நாங்கள் அமைச்சரின் பின்னால் நின்று செயற்பட்டு வருகின்றோம். ஏனென்றால் எமது பகுதிக்கு அபிவிருத்தி தேவை அபிவிருத்தி தேவையென்றால் அது அமைச்சராலேயே சாத்தியமாகிறது.

சுங்கானை மீன்சந்தை இடமாற்றம் என்பது இப்பகுதி வாழ் மக்களின் கட்டாயத் தேவையாகும். இதனை நாம் எமது சொந்த நிதியில் செய்வதற்கு முன்வந்திருந்தும் பிரதேச சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அதற்குத் தடையாக இருந்தனர்.

இந்நிலையில் பிரதேச சபையின் தவிசாளர் எங்களுக்கொரு யோசனை கூறினார். அதாவது எமது முயற்சி சாத்தியமாக்க வேண்டுமானால் அமைச்சர் ஒருவராலேயே அது முடியும் என்றார். அதன்பிரகாரம் நாம் அமைச்சரை நாடினோம். இன்று அப்பணி நூற்றுக்கு நூறுவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது.

எங்களுடன் அமைச்சர் இன்று உயிரோடு இருக்கின்றார் என்றால் – அது எமக்கு பணியாற்ற வேண்டுமென்றே கடவுளால் அனுப்பப்பட்ட அவதாரம் என்பதாலேயே ஆகும்.

எனவே, இன்று நாம் அமைச்சருடன் இணைந்திருக்கிறோம். கடந்த காலங்களில் தவறுகளை இழைத்து விட்டோம் அவை கசப்பான இருண்ட காலங்கள். இப்போது அப்படியல்ல நிம்மதியான காலம் தோன்றியிருக்கிறது.

எனவே, அனைத்து சமூகசேவையாளர்களும் அமைச்சருடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி சனசமூகநிலையத்தின் போசகர் ஜெகநாதன், தலைவர் பிரதிப் ஈ.பி.டி.பியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கிஸ்தர் விந்தன் ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சிற்றுரையில் சனசமூக நிலையத்தினரால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படுமெனத் தெரிவித்தார்.

வீதிகள் அபிவிருத்தி, கிராம அபிவிருத்திச் சங்கததுக்கான கட்டட வசதி, முன்பள்ளியின் தேவைகள் உட்பட அனைத்தும் அவதானத்தில் கொள்ளப்பட்டு முன்னுரிமையடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் பாலகிருஸ்ணன் ஜீவன் செயலர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts